Monday, July 18, 2016

FeTNAவும் பரதேசியும் இன்னும் பலரும்

பொதுவாக நட்சத்திரங்களை தூர இருந்து இரசிப்பது போல் இருக்காது அருகாமையில் பார்க்கும் போது. ஆனால் இந்த FeTNA விழாவின் அதிசயமே அதற்கு நேர்மாறாக இருப்பது தான்.

மயில்சாமி அண்ணாதுறையை சாப்பிடவிடாமல் துரத்திய செய்தியாளர்களை கண்டதும் அட விடுங்கப்பா அவர் சாப்பிட்ட பிறகு கேள்விய கேளுங்கள் என்று நாம் சொல்லும் அளவிற்கு மிகவும் எளிமையான மனிதாராக இருந்தார் அவர்.

அவர் மேடை பேச்சும் என்ன அருமையாக இருந்தது, தான் தமிழில் தான் படித்தேன் என்ற செய்தியை பெங்களூரில் கன்னட மாணவர்களுக்கு தமிழிலேயே சொல்ல செய்து, கன்னட மாணவர்கள் கன்னடத்தில் தான் படிக்கவேண்டும் என்று சொன்ன நிகழ்வும் நெஞ்சை ஈர்த்தது.

அதை தொடர்ந்து தமிழருவிமணியன் அவர்களின் அரசியல் பேச்சாகட்டும் இலக்கிய பேச்சாகட்டும் என்ன அருமையாக எடுத்துரைத்தார். சந்தித்த அனைவரையும் சென்னை வந்தால் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்ததின் அருமை நேரில் கண்டவருக்கு மட்டுமே தெரியும்.

அன்று விடுதலை புலிகளையும் ஈழத்தையும் பற்றி பேசிய அடேல் பார்கர் பேச்சு ஆகட்டும் அதை பற்றி பொய்யும் புரட்டுமாக விகடன் செய்தியாளர் கண்ணில் பார்த்தது போல் செய்தி வெளியிட்டதாகட்டும் பிரமிப்பு தான். குறிப்பாக அடேல் பேச்சுக்களின் இடையிடையே காண்பிக்கப்பட்ட படங்களுக்கு பிள்ளைகளின் கண்களை பெற்றோர்கள் மூடினார்கள் என்று எழுதினாரே அந்த மூடருக்கு சிங்கள அரசாங்கம் எவ்வளவு கைமாற்றியது என்று சொன்னால் நல்லது.

இப்படி நேரில் சந்தித்திராத நட்சத்திரங்களை நேரில் சந்திக்கும் போதும் அவர்களுடன் அளவளாவும் போது நமக்குள் ஏற்படும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அனுபவித்தால் மட்டுமே உணரகூடிய ஒன்று.

கவிஞர் பாசுகரன் அவர்களது கவியரங்கமும் அவரது இலக்கிய பேச்சும் அருமை, அரசியல் வாதிகளை பற்றி அவர் சொன்ன கவிதைக்கு சான்றாக அடுத்த மேடையிலே நடராசன் சசிகலா பேசியதை பார்க்கும் போது சிக்காத ஆள் இல்லை.

பாடகி அனுராத சிறீராம் ஆங்கிலத்தில் பேச கீழ ஒரு தமிழ்மகன் குறள்கொடுக்க நானும் பச்சை தமிழச்சிதான் என்று அவர் சீறீய காட்சியாகட்டும் அழகோ அழகு.

அங்கே கலந்துக்கொண்ட தமிழ் பிள்ளைகள், கொஞ்சு தமிழில் தனக்கு தமிழ் தெரியவில்லை என்று தட்டுதடுமாறி சொல்லிய வாக்குமூலம் அருமையாக இருந்தது.

கடைசி நாள் நிகழ்ச்சியில் சிலம்பொலி செல்லப்பன் அவர்களும், தமிழருவிமணியன் மற்றும் கவிஞர் பாசுகரன் அவர்களும் பிளந்துகட்டிய இலக்கிய சொற்பொழிவாகட்டும் அருமையோ அருமை.

அதே கூட்டத்திற்கு நடிகர் சீவா, பசுபதி, கவிஞர் வைரமுத்துவும் வந்திருந்தார்கள் என்றது வேறு செய்தி.

இந்த வரிசையில் இன்றைக்கு பதிவர் பரதேசி அவர்களின் அனுபவம் பகிர்ந்து இருந்தார். 7 ஆண்டுகளுக்கு முன் அட்லாண்டாவில் நடந்த நிகழ்வு இன்றைக்கு தான் நடந்தது போல் இருக்கிறது அந்த அன்பும், வரவேற்பும், உபசரிப்பும். விழாவில் கலந்துக்கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும் அந்த அருமை.

0 comments: