Monday, August 31, 2009

புருனோ Bruno - என்ற நாகரீக புயல் – 2

இந்த தலைப்பில் எழுதினாலும் எழுதினேன், அந்த நாகரீக புயல் அனானியாக வந்து என்னை பொரிந்து தள்ளிவிட்டார். இதிலே எங்கே ஆதாரம் என்ற கேள்வி எல்லா பின்னூட்டத்திலும் கேட்டுள்ளார். இவ்வளவு பேசும் இவர் இவரது பெயரில் வந்து வாதாட வேண்டியது தானே அதை விடுத்து அனானி முகமூடி எதற்கு இந்த நாகரீக புயலுக்கு.

இந்த அனானி வாதத்திற்கு எல்லாம் நாம் பதில் சொல்ல போவதில்லை. ஆனால் அதற்கு இடையில் வந்து சென்ற மற்ற நண்பர்கள், புருனோவை நான் என்னவோ வேண்டும் என்றே வசைபாடுவதாக நினைக்கும் விதமாக அந்த அனானியின் பதிகள் அமைந்துவிட்டதால் இந்த பதிவையும் எழுதுவது அவசியமாகிறது.

நண்பர் புருனோவிடம் நாம் கேட்பது எல்லாம் இவ்வளவு தான், இராசாவை கேவலபடுத்தவேண்டும் என்று ஏன் உங்களுக்கு இவ்வளவு துடிப்பு. அந்த செயலில் புருனோ இறங்கும் போது எவ்வளவு தரம் தாழ்ந்து போகும் நிலைக்கும் கூட அவர் தயங்குவது இல்லை என்று சுட்டிக்காட்டி எழுதினோம். பாவம் இந்த ஒரு விமர்சனத்தை கூட தாங்கிக்கொள்ள முடியாத இவர் முகமூடியின் துணை கொண்டு என்னை துளைத்தெடுத்துள்ளார்.

நண்பர்களே புருனோ இப்படி பேசுவதும், வாங்கிக்கட்டிக்கொள்வதும் புதிதல்ல, இங்கே இரோசாவசந்திடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருப்பது பாருங்கள்.ரோஸாவசந்த் 10:19 am on August 28, 2009 Permalink Reply

ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. அப்படி இருக்க இதில் மேலும் நேரத்தை செலவிடாமல் இருப்பதுதான் உசிதமானது என்று தோன்றுகிறது. ஆனால் நீங்கள் அன்புடன் பதிலை எதிர்பார்க்கிறேன் என்று சொன்னதால் இந்த சிறிய பதில். ( ஏதாவது ஒரு கட்டத்தில் சில கருத்துக்களை சொல்லிவிட்டால் அதை மீண்டும் சொல்ல வேண்டி இருக்காது, அடுத்த கட்டத்திற்கு செல்லலாம் என்பதற்காகவும்)

என் கருத்துக்களை என் இரண்டு பதிவுகளில் சில வருடங்கள் முன்னால் எழுதி, நீங்களும் வாசித்து பின்னூட்டம் கூட இட்டிருந்தீர்கள்.

http://rozavasanth.blogspot.com/2006/05/1.html
http://rozavasanth.blogspot.com/2006/06/2.html

இந்தி பாடல்களை கேட்டுகொண்டிருந்த தமிழர்களை தமிழ் பாடல்களை ராஜா கேட்க வைத்தார் என்று சொல்லும் வாதத்தை சில ஆதாரத்துடன் வன்மையாக மறுத்திருந்தேன். உங்கள் பின்னூட்டத்தை பார்த்தால் அதை நீங்கள் ஏற்றுகொண்டதாக தோற்றமளிக்கிறது. இப்போது மீண்டும் கேட்ட 30 வருஷமாக அதே வாதத்தையே மீண்டும் சொல்கிறீர்கள். இந்தியில் இருந்து ராஜா தமிழை காப்பாற்றினார் என்பது போல எம்.எஸ்.வி போன்ற மேதைகளை கேவலப்படுத்தும் வாதம் வேறு கிடையாது. ராஜா என்று ஒருவர் பிறக்காமல் இருந்தால் கூட இந்திப்பாடல் ஆதிக்கத்திலிருந்து தமிழ் நிச்சயாமாய் தப்பியிருக்கும், நம்புங்கள்!

அடுத்து ஹிந்திக்காரர்கள் எல்லாம் இப்போது தமிழ் பாட்டு கேட்டுகொண்டிருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் இதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. அடிப்படையில் அடிமை மனநிலையை கொண்டிருப்பவர்களுக்குதான் இந்திக்காரர்கள் இசையை அங்கீகரிப்பது என்பது ஒரு பொருட்டாக இருக்க முடியும். ராஜா தமிழ் திரை உலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியிருந்த போது, இந்தியில் பப்பிலஹரி கொடிகட்டி பறந்தார். உங்கள் அளவுகோல் படி பப்பிலஹரி ஒரு மேதையாக தெரியலாம். நான் கட்டாயப்படுத்தி உங்கள் கருத்தை மாற்ற முடியாது.

சுமார் 40 ஆண்டுகளாக மிக வளமாக இருந்த ஹிந்தி திரை இசை, 70களிலேயே அலுப்பூட்டும் மோனொடோனஸ் இசையாக மாறி, 80 களில் குப்பையாகி, 80களின் இறுதியில் கழிவாக மாறியிருந்தது. இவைகளை உதாரணத்துடன் விளக்க முடியும். அந்த சூழலில் கூட ராஜாவால் இந்தியில் தடம் பதிக்க முடியவில்லை என்றால் அந்த வெகுரசனை கேவலமானதா அல்லது அது ராஜவின் குறையா?

நான் ரஹ்மான், ராஜா உட்பட யாரையும் ஒப்பிடுவதில்லை. ராஜாவின் இசை மட்டும் போதுமான ஒன்றாக எனக்கும் சமூகத்திற்கும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் ஜீனியஸ் என்ற வார்த்தைக்குள் ராஜாவை மட்டுமே என்னால் அடக்க முடியும். ஓரளவு இசை அறிவு கொண்டு மற்றவர்கள் அளித்த இசை பரிணமித்ததை பாதையை ஒரு சட்டகத்தில் புரிந்து கொள்ள முடியும். ரோஜா, ஜெண்டில்மேன் துவங்கி ̀மஸக்கலி ‘பாடல்வரை அது எவ்வாறு ஏற்கனவே இருந்த இசைகளை மிக திறமையான முறையில், நீண்ட உழைப்பிற்கு பின் manipulate செய்து உருவானது என்று புரிந்து கொள்ளமுடிகிறது. ராஜா அளித்தவைகள் இத்தகைய எந்த புரிதலுக்கும் அப்பாற்பட்டு இருப்பதாலேயே அவரை மட்டுமே நானும் பலரும் ஜீனியஸ் என்கிறோம். இதில் மாறுபடுவர்களுடன் சண்டை போடுவதில் எந்த அர்த்தமும் இல்லை -ஓரமாக இதை சொல்லிவிட்டு போவதை தவிர.

ராஜா செய்த அனைத்தும் அதிசயம்! ̀செந்தூரப்பூவே’யில் துவங்கி (நான் அன்னக்கிளியில் ராஜாவை துவக்க மாட்டேன்) ̀தென்றல் வந்து தீண்டும் போது’ வரை அனைத்தும் நமது புரிதல்களுக்கு அப்பாற்பட்டது. இதுவரை நாம் அறிந்த genreக்களில் அடங்காமல், அவைகளின் fusion என்றும் வகைப்படுத்த முடியாத ஒன்று. ராஜாவின் காலத்தில் இந்த அதிசயத்தை உணர்ந்தததாக சொல்ல முடியாது. அப்போது அது ஒரு ஹிட் இசை என்ற அளவில் மட்டுமே இருந்தது. 20 ஆண்டுகள் கழித்தே இதன் பல அறியாத நுட்பங்களை பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னமும் பிடிபட்டதாக சொல்ல முடியவில்லை. அதிசயிக்க மட்டுமே முடிகிறது.

ராஜாவையும் ரஹ்மானையும் ஒப்பிடுவது என்பது மிகவும் அபத்தம். நான் ஒரு அறிவுத்துறையில் ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால் இதற்கு முன்னால் பங்களித்தவர்களை தாண்டித்தான் ஏதாவது செய்யவேண்டும். அவ்வாறு தாண்டி செய்துவிட்டதால் ஐன்ஸ்டீனை விட நான் பெரிய ஆளாகிவிட முடியாது. அந்த வகையில் ரஹ்மான் ராஜாவை தாண்டி சென்றவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இதை வேறு விதமாக பார்க்கலாம். (இதுவும் நேரடி ஒப்பிடல் இல்லை.)

76இல் இருந்து 92 வரை ராஜா, 92இல் இருந்து 2008வரை ரஹ்மான். இந்த 16 வருடங்களை ஒப்பிடுங்கள். புகழின் உச்சத்தில் இருந்தும் ரஹ்மான் இன்னும் 100 படங்களுக்கு கூட இசையமைக்கவில்லை. ராஜாவோ சுமார் 800 படங்கள், எல்லா படங்களிலும் இன்னும் 100 ஆண்டுகளுக்கு நாம் அலசவேண்டிய நுட்பம் கொண்ட பிண்ணணி இசை. அந்த கணத்தில் நிகழ்ந்த அதிசயம் போல பாடல்கல். இவை அத்தனையும் ராஜா என்ற தனி மனிதன் முழுமையாக எழுதிக்கொடுத்தது. ரஹ்மானைப்போல விக்கி விநாயக்ராமின் பையனை(பெயர் மறந்து விட்டது) பல வகை தாளங்களை தனித்தனியே போடச்சொல்லி, பதிவு செய்து, அவைகளின் பல கலவைகளை இரவு முழுக்க ஆராய்ந்து ̀அழகான ராட்சசி’யின் தாளமாக தருவது அல்ல. ரஹ்மான் செய்வது மீது எனக்கு எந்த விமர்சனமில்லை. ஆனால் அது நாம் புரிந்து கொள்ளும் சட்டகத்தில் அடக்கும் மிக திறமை + உழைப்புக்கு பின் விளையும் இசை. ராஜா, பலர் கவனித்திருக்க வாய்ப்பு குறைவாக உள்ள, ̀பகவதிபுரம் ரயில்வே கேட்’ என்ற படத்தில் ̀செவ்வரளி தோட்டத்திலே’ அளித்தது இந்த புரிதல்களுக்கு அப்பாற்பட்ட அதிசயம்.

இருந்தாலும் ராஜாவை சினிமாவிற்கு பொருத்தமானவராக இல்லை என்றுதான் என் பதிவில் கருத்து கூறியிருக்கிறேன். இதை இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதியிருக்கிறேன். “சினிமாப் பாடலிசையின் தேவைகளை மிக பொருத்தமாய் (ஒரு விஸ்வநாதனைப் போல, ரஹ்மானைப் போல) அவராய் திருப்தி செய்ய இயலவில்லை என்றும் தோன்றுகிறது” என்பதுதான் என் கருத்து.

இந்த வகையில் ராஜா குறித்தும் மற்றவர்கள் குறித்தும் பேசவும், உரையாடவும் நிறைய உள்ளது. (20 ஆண்டுகளாய் குப்பைகளை உற்பத்தி செய்த) ஹிந்தியில் வெற்றி பெற முடியவில்லை, வெள்ளைக்கார சினிமாக்காரன் ரஹ்மானை கூப்பிட்டான் ராஜாவை கூப்பிடவில்லை என்கிற வாதங்களை முன்வைத்து அல்ல. (உண்மையில் பல மேற்கின் இசை அறிஞர்கள் ராஜாவைத்தான் கொண்டாடுகிறார்கள், ரஹ்மானை அல்ல என்பதுதான் உண்மை. ஆதாரத்துடன் மேற்கோளுடன் சொல்ல முடியும்). மற்றபடி நீங்கள் கேள்வி கேட்டு பதில் சொல்லி விவாதிக்கும் விஷயம் இதுவல்ல. உங்கள் கருத்துக்களை மாற்றும் நோக்கமும் எனக்கில்லை. ராஜா மீதான் வெறுப்பு என்று காரணம் இல்லாம் பரவிகொண்டிருக்கும் அலையில் நீங்கள் விழக்கூடாது என்ற அக்கறையில் நீங்கள் கேட்டதன் பெயரில் இந்த சந்தர்ப்பத்தில் இந்த பதில். நன்றி!


புருனோ 12:56 pm on August 28, 2009 Permalink Reply
//ஸாரி புருனோ, நீங்கள் இந்த 6 கருத்துக்களை ஆழ்ந்த ஆராய்ச்சி + நீண்ட பரிசீலனைக்கு பின் வந்தீர்கள் என்பதை என்னால் உணர இயலவில்லை. //
அப்படி என்றால் நான் கூறியதில் எது தவறு என்கிறீர்கள். அப்படி தவறு என்றால் நீங்கள் கூறும் கருத்து என்ன. அதற்கு ஆதாரம் தாருங்கள்
கீழ்க்கண்ட கருத்துகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லையா
1. ராஜா மிகச்சிறந்த இசையமைப்பாளர்
2. அவரது பாடல்கள் காலத்தால் அழியாதவை
என்ன கொடுமை சார் இது


இதை போலதான் இந்த நாகரீக புயல் எல்லா இடத்திலும் அதும் இராசாவை புகழ்ந்து எழுதும் அனைத்து இடங்களிலும் சென்று எழுதுவார். தான் ஒரு மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் இவர், அந்த படிப்புக்கு தகுந்த பக்குவம் கூட இல்லாமல் எழுதுவதும் வாதம் புரிவதும் பாவமாகவும், நகைப்பாகவும் இருக்கிறது என்று எடுத்து சொல்வது மட்டுமே இந்த பதிவுகளின் நேக்கம். நண்பர் புருனோவை இழிவு படுத்தவோ தூற்றவோ அல்ல என்று தெளிவுபடுத்திகொள்கின்றோம்.

Friday, August 28, 2009

புருனோ Bruno - என்ற நாகரீக புயல்

அனேகமாக இந்த நபரின் பெயர் அனைவரும் பழக்கமாக ஒன்றாக இருக்கும். பயனுள்ள பல தகவல்களை கொடுப்பவர். இவரது கருத்துகளையும், எண்ணங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஒரு ஆர்வமும் முதலில் பிறந்தது உண்மையே. எது வரையில், இளையராசாவை இவர் கிழி கிழி என்று கிழிக்க துவங்கும் வரை.

இவரது நாகரீகத்திற்கும் உலக அறிவிற்கும் ஒரு எடுத்துகாட்டு. மிக சமீபத்தில் இளையராசாவை பற்றி படித்தவைகளை ஒரு பதிவர் தொகுத்து வெளியிட்டுக்கொண்டு வந்தார்.

அந்த பதிவில் பழயபடி இரகுமானா இராசாவா என்ற ஆவர்தணம் நடக்க துவங்கியது. அப்படி துவங்கும் வரை பொறுத்து இருந்த இந்த நாகரீக புயல், சிம்பொனியை பற்றி ஏதாவது யாராவது சொல்லுங்களேன் என்று கெஞ்சும் அளவிற்கு சென்று இருந்தார்.

அந்த தொடரில் இரகுமானை பற்றி குறிப்பிட்டவர்கள் இராசாவால் இந்தி இரசிகளை ஈர்க்க முடியவில்லையே அது அவரது திறமையின்மையை காட்டுகிறது என்ற கருத்தை சொல்ல. இந்த நாகரீக புயல் "இராசாவுக்கு இந்தியும் கிடையாது ஆசுகரும் கிடையாது, அதனால் அவர் திறமையும் பெருமையும் அற்றவர்" என்று எழுதி இருந்தார்.

இளயராசாவோ அல்லது அவரது இரசிகர்களோ இந்த நாகரீக புயலிடம் வந்து "நான் இசை ஞானி என்று பட்டம் கொடுங்கள் அல்லது என்னை அங்கிகரியுங்கள்" என்றோ கனவிலும் கூட கேட்க போவதும் இல்லை.

இராசாவின் புகழும் பெருமையும் இராசாவுக்கு நன்றாக தெரியும், அதையும் விட அவரது இரசிகர்களுக்கு நன்றாக தெரியும். அதோடு அது முடிந்தும் விடும். இல்லை அவை எல்லாம் இந்த நாகரீக புயலால் தான் நிறுவப்படுகிறது என்று இவர் எண்ணிக்கொண்டால் நல்ல மருத்துவரை பார்ப்பது நல்லது. ஏன் என்றால் இது உங்களுக்கு ஒரு வியாதி. இல்லை என்றால் இப்படி நிறைய படித்த பிறகும் இப்படி எல்லாம் பேச மாட்டீர்கள்.

ஒரு பேச்சுக்கு வைத்துகொள்வோம், கர்னாடக இசை பெரியோர்களின் பெயர்கள் கூட இந்தி உலகில் உங்களை போன்ற இரசிகர்களுக்கு 99% பேருக்கு தெரியாது தான். அதற்காக அந்த இசை பெரியோர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று சொல்வது போல இருக்கிறது உங்களின் வாதம். உங்களது அனைத்து வாதங்களும் இந்த விதமே. இதிலே "கருத்துகளை மறுத்தாலும் நாகரீகம் மறக்காத அதே புருனோ" எல்லாம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

Thursday, August 27, 2009

மக்கள் விடுதலை புலிகளின் மேல் வைக்கும் விமர்சனங்கள் சரியானவை தானா??

பொதுவாக ஈழ சம்பந்தமாக என்ன வாக்குவாதங்கள் எழுந்தாலும், அவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களானாலும் சரி, பொதுவாக கீழ் கண்டவாரு வாதங்களை வைப்பார்கள்.

 1. புலிகள் தீவிரவாதிகள் அதோடு நில்லாமல் பயங்கரவாதிகள்.
 2. இராசீவ் காந்தியை படுகொலை புரிந்தவர்கள்.
 3. மக்களை கேடையமாக கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டவர்கள் தான் இந்த புலிகள்.
 4. ஈவு இரக்கம் இல்லாமல் மக்களை மிரட்டி அவர்களது உழைப்பை அபகரித்து உல்லாச வாழ்க்கையை நடத்தியவர்கள்.
 5. அப்பாவி மக்களை குண்டு வைத்து கொத்து கொத்தாக கொன்றவர்கள்.
 6. புலிகள் பிரிவிணைவாதிகள். தேசத்தை துண்டாட நினைப்பவர்கள்.

இன்னமும் கொஞ்சம் அதிகம் தகவல்கள் உள்ளவர்கள் இப்படி பட்டியலிடுவார்கள்.

 1. புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் கூட்டம்.
 2. அனைத்துலக நாடுகளும் தேடும் பயங்கரவாதிகள்.
 3. அனைத்துலக சந்தையில் கள்ளத்தனமாக ஆயுதங்களை கடத்துபவர்கள்.
 4. அனைத்துலக நாடுகளுக்கும் முறை கேடான வகையில் பொருளீட்டி கொடுத்து அந்தந்த நாட்டில் பிரிவிணைவாதத்தை தூண்டுபவர்கள்.
 5. இந்தியாவின் பாதுகாப்புக்கு இவர்களால் கேடு தான் விளையும்.
 6. இவர்களை ஆதரித்தால், பிறகு இதையே காரணமாக காட்டி காசுமீரும், நக்சல்பாரிகளும் தங்களது அட்டகாசங்களை தொடருவர்.

இப்படி கட்டு கட்டாக அடுக்கிக்கொண்டே போவார்கள்.

இவர்கள் சொல்லும் அத்தணை குற்றசாட்டுக்களையும் ஒன்று ஒன்றாக பார்ப்போம்.

புலிகள் தீவிரவாதிகள் அதோடு நில்லாமல் பயங்கரவாதிகள்.

எதனால் புலிகளை பயங்கவாதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சொல்கிறீர்கள் என்று கேட்டால். அவர்கள் தேவைக்காக நாட்டில் உள்ள எதிரணியினரை கொன்று குவிப்பவர்கள் என்று சொல்வார்கள்.

சரி தான் சிங்களம் என்ன செய்தது என்று அவர்களையே திருப்பி கேளுங்கள். அவர்களிடம் மௌனம் தான் பதிலாக இருக்கும். சிங்களம் தமிழர்களை கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கி நெருக்கி வாழ்க்கையின் விளிம்பிற்கே தள்ளியதோடு மட்டும் நில்லாது. அந்த நிலையிலும் அவர்களது வாழ்க்கை தொடர்வதை பிடிக்காமல் கூட்டம் கூடமாக கொன்று குவிக்கும் வரை பொருமை காத்த மக்கள் அல்லவா அவர்கள். அது வரையில் பாதுகாப்பு வேண்டும் என்று சிங்களத்திடம் அல்லவா கேட்டார்கள். இனிமேலும் இவர்களிடம் கேட்டு நின்றால் எதுவும் மிஞ்சாது என்று முடிவான பிறகு அல்லவா இந்த ஆயுத போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

அதுவும் எப்படி அணு ஆயுதம் எங்களிடம் இருந்தாலும் முதலில் அதை கொண்டு அடிக்கப்போவது இல்லை. எங்களை அப்படி ஒரு கட்டத்துக்குள்ளாக்கும் போது கட்டாயம் அணு குண்டு கொண்டு அடிப்போம் என்று இந்தியா சொல்லிக்கொண்டு வருவதை போல் அல்லவா இவர்களும் செய்தார்கள். இது எந்த வகையில் குற்றமாகும் என்று யாரேனும் சொல்ல இயலுமா.

இராசீவ் காந்தியை படுகொலை புரிந்தவர்கள்.

சிங்களமும் சரி இந்தியாவும் சரி என்ன பூமாலையோடா சென்று புலிகளை அழைத்துவர செய்தது. அல்லது அவர்களுக்கு விருந்துகளை வைத்து சாதுவாகவாக இவர்கள் பேசிக்கொண்டு வந்தார்கள். சமாதானப்பேச்சுவார்த்தைகளுக்கு என்று இயங்கிக்கொண்டு இருந்த தமிழ்ச்செல்வனில் தொடங்கி கடைசியாக காட்டிய செய்திகள் வரை எது ஒன்றாவது கொலை இல்லாமல் இவர்களால் முடிந்ததா. பிறகு உபதேசம் எல்லாம் அடுத்தவனுக்குத்தானோ..... சொல்லும் தங்களுக்கு எல்லாம் இல்லை போலும்.

அதுவும் கொல்லப்பட்ட அனைவரையும் எவ்வளவு கோரமாக சிங்களமும் இந்தியாவும் நடத்தியது என்று உலகே அறியும், இனியும் இந்த படு கொலை என்றோ இத்தியாதி இத்தியாதி என்றோ பேச ஒருவருக்கும் அருகதை கிடையாது..............

மக்களை கேடையமாக கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டவர்கள் தான் இந்த புலிகள்.

சிங்களமும் சரி இந்திய இராணுவமும் சரி, என்ன புலிகள் எங்களை வந்து தாக்கட்டும் என்று ஊருக்கு வெளியில் யாரும் இல்லா தனி இடத்தை தேர்ந்து எடுத்து காத்துக்கொண்டா இருந்தார்கள். இவர்கள் எப்படி சிங்களத்தோடு ஐகியப்பட்ட ஊரில் ஊருக்கு நடுவில் பாதுகாப்பு மிக்க பகுதியில் இருந்தார்களோ அவர்களும் அப்படி தான் இருந்தார்கள்.

இந்த இருவரில் ஒரு வித்தியாசம் உண்டு, புலிகள் தாக்குதல் தொடுக்கும் போது தாக்குக்கு உள்ளாவது என்னவோ இராணுவம் மட்டும் தான், ஆனால் சிங்கள் தாக்குதலுக்கு உள்ளாவது 99% பொது மக்கள் தான். இதிலே வியாக்கியானம் வேறு, அது மட்டும் நில்லாது, மக்களுக்கும் பொது சொத்துக்கும் புலிகளால் ஆபத்து என்று பரப்புரைவேறு.......

ஈவு இரக்கம் இல்லாமல் மக்களை மிரட்டி அவர்களது உழைப்பை அபகரித்து உல்லாச வாழ்க்கையை நடத்தியவர்கள்.

எப்படி பட்ட உல்லாச வாழ்க்கையை புலிகள் வாழ்ந்தார்கள் என்று தான் சிங்களம் அவர்கள் வெற்றி கொள்ளும் காட்சியில் காண்பித்தார்களே. நாலு அலுமினிய பாத்திரங்கள், 5 துணிமணிகள், மற்றும் கையில் பிள்ளைகளும் பெண்களும். இதை தான் உல்லாச வாழ்க்கை என்றால் சிங்களமும் இந்தியர்களும் வாழும் வாழ்க்கையை என்ன தெய்வீக வாழ்க்கை என்று தான் சொல்லவேண்டும்.

சிங்களம் தங்களது நாட்டு மக்களின் வரிப்பணத்தில் தான் புலிகளின் மேல் போர் தொடுத்தது. அது ஒன்றும் அவர்களது அப்பன் வீட்டு பணம் அல்ல, அது போலத்தான் புலிகளும் தமிழ் மக்களின் பணத்தில் சிங்களர்களுக்கு எதிராக போர் தொடுத்தது. அதுவும் எப்படி ஒரு இலட்சம் இராணுவ வீரகளுக்கு எதிராக ஒரு சொற்ப அணியை கொண்டு முடிந்த அளவிற்கு என்று ஆயுதம் வாங்கி போர் புரிந்தது.

தவிர, இந்த தமிழ்மக்களுக்கு என்று எந்தவிதமான ஒரு வருவாய்க்கும் வழியே இல்லை என்றது ஊரரிந்த ஒரு இரகசியம். அப்படி இல்லாத பணத்தை புலிகள் பரித்தார்கள் என்று சொல்ல உங்களுக்கு எல்லாம் நா கூசவில்லை......

அப்பாவி மக்களை குண்டு வைத்து கொத்து கொத்தாக கொன்றவர்கள்.

இதை செய்தது சிங்களமும் இந்தியாவும் தானே ஒழிய புலிகள் இல்லை, அப்படி இருப்பின் உங்களால் உதாரணங்கள் காட்ட முடியுமா. கடைசி நாள் யுத்ததில் மட்டும் 10,000 தமிழர்களை கொன்று குவித்துள்ளது சிங்களம்.

இப்படி சொன்னால் போர் என்றால் பொது மக்கள் மடிவது நடக்ககூடிய ஒன்று தான் என்று செயலலிதா சொன்னதை போல் தான் இந்த அறிவு சீவிகளும் சொல்வார்கள். ஏன் இந்தியா காசுமீரத்தில் பயங்கரவாதிகளோடு சண்டையிடவில்லை அங்கே என்ன இப்படி கொத்து கொத்தாகவா கொன்று நிலத்தை மீட்டது. அல்லது அது முடியாத காரியமா என்ன.

புலிகளை வளர்ந்த மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை புலிகளோடு அழிப்பது என்றது எந்த விதத்தில் சரியாக இருக்கும் பதில் சொல்ல முடியுமா உங்களால்.......

புலிகள் பிரிவிணைவாதிகள். தேசத்தை துண்டாட நினைப்பவர்கள்.

யார் பிரிவிணைவாதிகள், சிங்களம் தவிர்து மற்ற மொழி பேசுபவர்கள் இந்த நாட்டின் மக்கள் இல்லை என்று சொல்ல இவர்களுக்கு என்ன அதிகாரகம் முதலில் இருக்கிறது. இந்தி பேசாத ஒரே மா நிலம் இந்தியாவிலே தமிழகம் மட்டும் தான். அதற்காக தமிழகம் இந்தியாவோடு இருக்க தகுதி இல்லாத பகுதியாக ஆகிவிடுமா என்ன..........

இலங்கையின் பிரிவிணைவாதிகள் சிங்களம் தானே ஒழிய தமிழர்கள் அல்ல....

புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடும் கூட்டம்.

ஒரு பலம் மிக்க அரசோடு மோதி, அதுவும் ஆயுத போராட்டமாக மோதி விடுதலையை கொள்ளவேண்டும் என்று ஆனபிறகு அதை என்ன பிச்சை எடுத்த செய்யமுடியும். புலிகளுக்கு என்று எந்த விதத்தில் பணமும் பொருட்களும் கிடைக்கும். உண்ணும் உணவுக்கே அங்கே தட்டுப்பாடு. பிறகு எப்படி ஆயுதம் வாங்குவது, போராட்டம் நடத்துவது.

முதலில் இந்தியா தனது சுய நலத்திற்காக போராட்டத்தை துவக்கிவைத்தது, அதுவும் எப்படி ஆயுதம் மற்றும் எல்ல பொருட்களையும் கொடுத்து. பிறகு அதன் தேவை முடிந்த பின், புலிகளது விடுதலையை பற்றி எந்த ஒரு கவலையும் கொள்ளாது அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவந்தது.

முட்களின் மேல் விழுந்த சேலையாய் புலிகளின் வாழ்க்கை சிங்களத்தின் கரங்களில் சிக்க வைத்துவிட்டு இந்தியா தப்பித்து கொண்ட வேலையில் ஒரே அடியாக சரணடைந்தால் இப்போது என்ன செய்ததோ சிங்களம் அதை தான் அப்பொழுதும் செய்திருக்கும்.

இப்படி எழுதுவதால் புலிகள் போதை மருந்தை கடத்தினார்கள் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் இந்த நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துகொள்ள அப்படி ஒரு வழி இருந்தால் செய்தால் தான் என்ன தவறு என்று தான் கேட்கிறேன்.

அனைத்துலக நாடுகளும் தேடும் பயங்கரவாதிகள்.

எந்த நாட்டில் எல்லாம் அவர்களை தேடினார்கள் என்று பட்டியலிட முடியுமா உங்களால். புலிகளது யுத்தம் சிங்களத்திடம் மட்டும் தான் அந்த எல்லையை தாண்டி அவர்கள் வந்தது கிடையாது.

அனைத்துலக சந்தையில் கள்ளத்தனமாக ஆயுதங்களை கடத்துபவர்கள்.

ஆயுதங்களை வாங்கியவனை இத்தணை சொல்கிறீகளே விற்றவனை பற்றி ஏன் வாய்திரக்கவே மாட்டேன் என்று சொல்கிறீர்கள். அப்படி ஆயுதம் கொடுத்த்வர்கள் எல்லாம் யார் யார் என்று பார்த்தால், இந்தியா, அமெரிக்கா, இரசியா, சீனா, பாக்கிட்த்தானம் ஆகிய நாடுகள் ஆகும். இதிலே இரசியாவையும் சீனத்தையும் தவிர மற்ற நாடுகள் எல்லாம் மக்களாட்சி நடக்கும் நாடு. அது எப்படி ஒரு குடியரசு கொண்ட ஒரு நாட்டின் அரசுக்கு எதிராக சமர் செய்ய இந்த குடியாட்சி நாடுகள் எல்லாம் எப்படி ஆயுதங்களை விற்க முனைந்தது என்று கேட்டு பாருங்கள், அவர்கள் பெப்பே பெப்பே என்று தான் பதில் சொல்வார்கள்........

அனைத்துலக நாடுகளுக்கும் முறை கேடான வகையில் பொருளீட்டி கொடுத்து அந்தந்த நாட்டில் பிரிவிணைவாதத்தை தூண்டுபவர்கள்.

புலிகளினால் என்ன என்ன நாட்டில் திவிரவாதம் தலைதூக்கியது என்று சொல்ல முடியுமா உங்களால். சிங்களம் தவிர்த்து வேறு எந்த ஒரு நாட்டின் அமைதிக்கும் குந்தகம் விளைவித்தவர்கள் அல்ல அவர்கள்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு இவர்களால் கேடு தான் விளையும்.

கட்டாயம் கேடுதான் விளையும், அடுத்தவன் அழியவேண்டும் என்று இந்தியா விரும்பியது. அவர்கள் என்ன அதற்கு பூமாலையா பரிசாக அளிப்பார்கள். ஈழ தாக்குதலின் ஆவணங்களை பார்க்கும் பார்வையாளர்கள் அனைவரையும் கேளுங்கள், இந்தியா ஈழத்தில் இப்படி படுகொலைகளை நடத்தியுள்ளதே என்ன செய்யலாம் என்று. கவிஞர் தாமரை சொன்னது போல் தான் சொல்வார்கள். பிறகு என்ன பாராட்டு பத்திரமா கொடுப்பார்கள். தன்விணை தன்னை சுடும். இதை விடுத்து புலிகளுடன் நல்லுரவு கொண்டு இருக்கலாம். ஆமாம் போகட்டும், இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்புக்கு மட்டும் என்ன பாதுகாப்பா என்ன.

இந்த இலங்கையின் இலட்சனத்தை தான் வங்க சமர் போது பார்த்தோமே, இந்திய இராணுவத்தின் மீது குண்டு மழை பொழிய பாக்கிட்த்தான விமானத்திற்கு எரிபொருளும் குண்டுகளையும் நிறப்பிக்கொள்ளும் இடமாக அல்லவா இந்த சிங்களம் விளங்கியது. அது மட்டும் அல்லாது, தற்பொழுது சீனத்துடன் இணைந்துக்கொண்டு அது போடும் ஆட்டதிற்கு அளவே இல்லை.

இது எல்லாம் கேடே இல்லையாம் புலிகளால் தான் கேடு வந்துவிடப்போகின்றதான் என்ன உங்களது அறிவு. இப்படி சொல்ல உங்களுகு வெட்கமாக இல்லை......

இவர்களை ஆதரித்தால், பிறகு இதையே காரணமாக காட்டி காசுமீரும், நக்சல்பாரிகளும் தங்களது அட்டகாசங்களை தொடருவர்.

எங்கே எல்லாம் மனித சமுதாயம் சுரன்டப்படுகின்றதோ அங்கே எல்லாம் போராட்டம் வெடிப்பது இயல்பே. அன்னிய சக்திகள் நாட்டை துண்டாடும் விதமாக நடந்துகொள்ளும் பொழுது பெட்டிகளை வாங்கிக்கொண்டு நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகிகள் இருக்கும் இந்த நாட்டில் இந்த போராட்டகாரர்கள் ஒன்றும் கொடியவர்கள் ஆகிவிடமாட்டார்கள்.

Wednesday, August 26, 2009

தப்பினார் பிரபாகரன் பகுதி- 82 தினமணியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்?

இந்த வரலாற்று தொடரை தொடர்ந்து படித்து வருபவர்களின் ஆர்வத்தை அதிகம் தூண்டும் தலைப்பாக இத்த பகுதி கொண்டு இருந்ததாலும், தவிர தொடரின் தொடர்சியை அறியும் ஆவலும் உள்ளவர்கள் இந்த பகுதி தினமணியில் இல்லாதது பற்றிய ஒரு வித குழப்பத்தில் ஆழ்ந்திருக்க வேண்டும். எனக்கும் அப்படி தான் இருந்தது.

பிறகு அந்த பகுதியை கண்டுபிடித்து படிக்கையில், அப்படி என்ன தான் இந்த பகுதியில் இருக்கிறது என்று பார்க்கும் போது மேலோடமாய் எதுவும் தெரியவில்லை தான்.

பிறகு ஓர்ந்து பார்த்ததில் இரண்டு செய்திகள் மனதில் தோன்றியது.

1) பிரபாகரனை அழிக்க எண்ணி அவரது இல்லத்தை குறிபார்த்து குண்டு வீசி இராணுவம் அழித்தது என்ற செய்தியும்.


2) தனி நாடாக அமைக்கும் பணியாக தனி நாணயம் மற்றும் அரசு துறைகளை ஏற்படுத்தியதுமாக தகவல்களும் இந்த பகுதியில் இருந்து தான் காரணமாக இருக்கும் என்று மனதுக்கு படுகிறது.

3) இதையும் தவிர விபு அமைபினர், மற்ற சகோதரத்துவ அமைபினர் தடைசெய்தார்கள் என்றும் அதனை ஒட்டி சிங்கள இராணுவம் இனி தமிழர்களின் போராட்டத்தை இராணுவ முறையில் வெற்றிகொள்வது எளிது என்று எழுதியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்த மூன்று செய்திகளில் முக்கியமான செய்தி, பிரபாகரனை அழிக்க எண்ணிய இராணுவம், அவரின் இல்லத்தை குறிவைத்து குண்டு வீசியது என்ற செய்திதான் முக்கியமாக குறிப்பாக எனக்கு படுகிறது. காரணம், இன்றைக்கு இந்தியாவில் புலிகளுக்கு எதிராக சொல்லப்படும் முக்கிய காரணம்(மற்றும் ஒரே காரணும் இது தான்), புலிகள் இராசீவின் கொலையை செய்தவர்கள் என்றதாகும். அப்படி பட்ட செய்தியை பலவீனப்படுத்தும் செய்தியாக் இந்த செய்தி அமைந்து இருப்பத்தால், இந்த பகுதியை தினமணி நீக்கி இருக்கவேண்டும்.

இரண்டாவது செய்தி, விபு தாக்குதல் அமைப்பு மட்டும் அல்ல ஆக்க பூர்வமாக அரசியலமைப்பு செய்கைகளும் மேற்கொண்டு வந்தார்கள் என்று இந்த தொடரில் முதல் முதலாக கிட்ட தட்ட 80 பகுதிகளுக்கு பிறகு தொடரின் ஆசிரியர் ஒப்புமை கொடுத்தது போல் அமைந்து இருந்தமைக்காக நீக்கப்பட்டிருக்கலாம்.

இந்த இரண்டாவது செய்தி, புலிகள் வெறும் பயங்கரவாதிகள் தான் என்று வாதாடும் அனைத்தையும் எதிர்க்கும் விதமாக உள்ளதாகும். அப்படி ஒரு செய்தி இந்திய செய்தி இதழில் வருவதை இந்திய அரசு தவிர்க நினைத்து இருக்கும் போலும். அதனால் தந்த நெருக்கடியில் தினமணி இந்த பகுதியை நீக்கி இருக்கவேண்டும்.

தமிழகத்தில் ஒரு வழக்கு உண்டு, ஒரு பொய்யை மறைக்க பிறகு 100 பொய்களை சொல்ல வேண்டி இருக்கும் என்று. அப்படி இந்திய அரசு இன்னமும் எத்தணை ஆயிரம் பொய்களை அள்ளிவைக்க போகின்றதோ.......

Tuesday, August 25, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 82: தப்பினார் பிரபாகரன்! (தினமணியில் இருந்து நீக்கப்பட்ட பகுதி இது)பாவை சந்திரன்
First Published : 21 Aug 2009 01:14:00 AM IST


தைப்பொங்கல் (1987, ஜனவரி 14) நாளிலிருந்து சுதந்திரத் தமிழ் ஈழம் அமைதல், யாழ்ப்பாணத்தில் நகர நிர்வாகத்தை மேற்கொள்ளுதல், சொந்த நாணயம் அறிமுகம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளப்போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்து, 1985 டிசம்பரில் இலங்கை நாளேடுகள் கூறியவற்றை மெய்ப்பித்தது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இணையான அரசை நிறுவுவதற்கான அறிவிப்பு இது. இதை முறியடிக்க சிங்கள அரசு தீவிரம் காட்டிற்று.

ஆனால், விடுதலைப் புலிகள் இந்தச் செயல்பாட்டை தை முதல் நாள் என்பதிலிருந்து மேலும் 17 நாள்களுக்குத் தள்ளிப்போட்டனர். ஆனால் சுதந்திரப் பிரகடனமும், நாணயம் வெளியிடுவதும் மட்டுமே தள்ளிப்போடப்பட்டது. சிவில் நிர்வாகம் என்று சொல்லப்படுகிற வாகனங்கள் பதிவு, தொலைக்காட்சி, வானொலிப் பெட்டிகள் அனுமதிப் பதிவு போன்றவற்றை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட செயல், உலக நாடுகளைத் திகைப்பில் ஆழ்த்தியது.

சகோதர இயக்கங்கள் மீதான விடுதலைப் புலிகளின் நடவடிக்கை, குறிப்பாக டெலோ தலைவர் ஸ்ரீசபாரத்தினம் அழிப்பு மற்றும் அவரது இயக்கத்துக்குத் தடை, பிளாட் அமைப்புகள் இயங்கத் தடை, அதே போன்று ஈபிஆர்எல்எஃப் இயக்கம் இயங்கத் தடை (இவை குறித்து பின்வரும் "விடுதலைப் புலிகள் பற்றிய வரலாற்றில்' விரிவாக ஆராய்வோம்) என அதிரடியாகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகள் கடும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றுதான் இந்திய உளவு அமைப்புகள் கருதின.

மாறாக, யாழ்ப்பாணத்தில் தங்களது சிவில் நிர்வாகத்தை விடுதலைப் புலிகள் மேற்கொண்டதை எண்ணி வியந்தன

இது ஒருபுறமிருக்க, இலங்கை சிங்கள அரசு யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை அமல்படுத்திற்று. இதனால் கொழும்பு மற்றும் தமிழ்ப் பகுதிகளின் எல்லைப்புறத்திலிருந்து எந்தப் பொருளும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லமுடியவில்லை. இதனால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளானார்கள். மின்சாரம், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்னெய் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நாளடைவில் யாழ்ப்பாணப் பகுதியில் விளையும் பொருள்கள் தவிர ஏனைய பொருள்கள் யாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.


இதரப் போராளிகள் இயக்கங்களுக்கு விடுதலைப் புலிகள் தடை விதித்த காரணத்தால், தங்கள் மீதான எதிர்ப்பின் வலு குறைந்துவிடும் என்றும் ராணுவம் மூலமான இறுதித் தீர்வை எட்ட இதுவே சரியான தருணம் என்றும் ஜெயவர்த்தனா அரசு கருதியது.

போராளிகள் ஆதிக்கத்திலிருந்து யாழ்குடா நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து மே மாதம் 18-ஆம் தேதி "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற யுத்தத்தை ஜெயவர்த்தனா அரசு தொடங்கிற்று. இதற்கான உளவுத் தகவல்களை இஸ்ரேல் போன்ற நாட்டினது உதவியுடன் அரசு பெற்றிருந்தது. இந்தப் போருக்குண்டான திட்டங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி அதிக முனைப்புடனும் ஒரு வெறியுடனும் செய்திருந்தார்.

தம் சொந்த மக்களையே வஞ்சிக்கும் ஒரு குரூரப் போக்குடன் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டுகளைப் பொழிந்ததால் மக்கள் அடைந்த துன்பம் அளவிடற்கரியதாயிற்று. நகரில் எங்கு பார்த்தாலும் மரக்கட்டைத் தடுப்புகளை ராணுவம் அமைத்திருந்தது. வண்டிகள் சுலபமாகச் சென்றுவர முடியாதபடி போக்குவரத்து தடைப்பட்டது.

ஆனையிறவிலிருந்து வடமேற்காக ராணுவத் துருப்பு ஒன்று சென்றது. அப்போது கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று தடுப்புக்கட்டைகளைப் பார்த்ததும் நின்றது. பயணிகள் சிலர் இறங்கிக்கொண்டனர். வேறு சிலர் சாலையின் குறுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டைகளை அகற்றி பயணம் மேற்கொண்டனர். இது கண்ட ராணுவத்தினர் அதில் போராளிகள்தான் போவதாகக் கருதி அந்தப் பேருந்தை நோக்கி குண்டுமழை பொழிந்தனர்.

இதேபோன்று நாவற்குழியிலும், பலாலியிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வகையான தடுப்புகளை மன்னார் மாவட்டத்தில் மேற்கொண்டபோது, அப்பகுதியின் விடுதலைப் புலிகள் கர்னல் ராதா தலைமையில் சொற்ப வீரர்களுடன் சென்று பெருந்தொகை ராணுவத்தினருடன் மோதி உயிர்துறந்தனர்.

ராணுவம் அச்சுவேலி என்கிற பகுதியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், விடுதலைப் புலிகள் பெருமளவில் வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். வான்வெளியில் அரசின் போர் விமானங்கள் எதிர்ப்பு எதுவுமின்றி இயங்கிக்கொண்டிருந்த நிலையில் அவ்வப்போது குண்டுகளையும் வீசிக்கொண்டிருந்தன.

தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயரில் ஏற்படுத்தப்பட்ட வானொலி ஒலிபரப்பு, யாழ் வானொலி ஒலிபரப்பாக மாறி யுத்தம் சார்ந்த தகவல்களை அறிவித்துக்கொண்டிருந்தது. இந்தத் தகவல்கள் அடிப்படையில் அந்த வானொலி யாருக்கானது என்பது கண்டுபிடிக்க இயலாததாக இருந்தது. மக்களைத் திட்டமிட்டுக் குழப்பும் வேலையில் இந்த வானொலி இயங்கியது.

அப்போதைய ஈழப் பத்திரிகைகள், இந்த வானொலி அறிவிப்புகளைக் கேட்டு, சிலசமயம் விடுதலைப் புலிகளின் வானொலி என்றும், சில அறிவிப்புகளைக் கேட்டு ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சார்ந்தவர்களின் ஒலிபரப்பு என்றும் தோன்றும்படியான செய்திகளை வெளியிட்டு வருவதாகத் தகவல் தெரிவித்தன. இப்படியொரு அறிவிப்பில், விடுதலைப் புலிகளின் தளபதிகளான மாத்தையா, கிட்டு ஆகியோரின் திருமணத் தகவல்களும் இடம்பெற்றன.

மே, 27-ஆம் தேதி அறிவிப்பில் ஒரு தகவல் கூறப்பட்டது. யாழ்குடா நாட்டிலிருந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, அகதி முகாம்களாக அறிவிக்கப்பட்டிருந்த தேவாலயங்களுக்கும் பாடசாலைகளுக்கும் செல்லும்படி ஒலிபரப்புச் செய்தி கூறியது. இந்த அறிவிப்பின் மூலம் அந்த வானொலி பலாலியில் அமைந்திருந்த ராணுவ முகாமிலிருந்து ஒலிபரப்பாவது உறுதியானது.

வடமராட்சியின் மக்கள் வசிக்கும் பகுதி அடுத்தடுத்து இருந்தபடியாலும் தொண்டமானாறு கடலேரியிலிருந்து செல்லும் பகுதி திறந்தவெளியாகவும் வடமராட்சியை யாழ்ப்பாணத்திலிருந்து பிரிப்பதாகவும் இருந்தது. இதன்காரணமாக வானிலிருந்து பார்க்க மக்களின் நடமாட்டம் எளிதில் காணக்கூடியதாக இருந்தது.

இந்தப் பகுதியில் ராணுவம் தனது தாக்குதலை அவ்வப்போது தொடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வல்வெட்டித்துறையில் இருக்கிறார் என்ற தகவலைப் பெற்ற ராணுவம் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தது. ஆனாலும் பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இவர் தங்கியிருந்த வர்த்தகர் வீடு, அதன் பின்னர் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.


நாளை: ராஜீவுக்கு நெருக்கடி!

Friday, August 14, 2009

தனி இயக்கம் காணும் தமிழருவி! ''தமிழகத்தைத் திருத்த 1 லட்சம் பேர்...''

ஐயா அவர்களை இல் சந்தித்து எங்களது வருத்தங்களை தெரிவித்த போது. எங்களிடம் அவர் கொடுத்த வாக்குறுதி இது. தாயகம் திரும்பியதும் ஒரு ஊருக்கு 2 என்ற கணக்கில் இளைஞர்கள் வந்தால் போதும், தமிழகத்தை திருத்திவிடலாம் என்றார். முதலில் அவர் சொல்வது ஆருதலுக்காக என்று இருந்தாலும். அவர் சொன்ன வார்த்தைகளின் செயலாக்கம் பார்க்கும் போது நெஞ்சம் பெருமையில் ததும்புகிறது.

இந்த வயதிலும் இவ்வளவு வேகமும் தீர்க்கமும், எதிர்காலத்தை கணித்து செயல்பட உங்களை போல் இன்னமும் பலர் தமிழ்மண்ணில் வரவேண்டும்.

விகடனுக்கு அவர் கொடுத்திருக்கும் செவ்வி இதோ விகடனின் வார்த்தைகளில்.......

"நயந்தோ பயந்தோ பேசத் தெரியாதபேச்சாளர் தமிழருவி மணியன். பேச்சைப் போலவே தான் எழுத்தும்... நியாயம் பிறழாத மிடுக்கும், சமூகக் கேடுகளின் மீதான கோபமும் மணியனின் எண்ணங்களில் எப்போதுமே நர்த்தனமாடும். ஈழத் துயரங்கள் தமிழகத்தைத்துக்கத்தில் ஆழ்த்தி யிருந்த வேளையில்... உயிரையே உதறி வீசிய உணர் வாளர்களுக்கு நிகராக, தான் வகித்த திட்டக்குழு உறுப்பினர் பதவியைத் துறந்த தமிழருவி மணியன், காங்கிரஸ் கட்சிக்கும் முழுக்குப் போட்டார். இப்போது 'காந்திய அரசியல் இயக்கம்' என்ற தனி இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறார். ஏன் இந்த முடிவு? அவரைச் சந்தித்தபோது...

''இருக்கிற கட்சிகள் போதாது என்று, உங்கள் காந்திய அரசியல் இயக்கம் வேறா?''
''காந்திய அரசியல் இயக்கம் என்பது கட்சி கிடையாது. அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கம். எங்க ளுக்கு எந்தக் கட்சியும் எதிரியில்லை. மக்கள் நலனுக்கு மாறாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்ப்பதுதான் எங்கள் இயக்கத்தின் நோக்கம். ஊழலுக்கு உற்சவம் நடத்தும் அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தினரையும் எவ்வித சமரசமும் இல்லாமல் எதிர்ப்போம். சமூகத் தீமைகளைக் களையெடுப்போம். சுயநல வேட்டையில் சுரண்டிக் கொழுக்கும் கட்சிகளில் ஒன்றாக ஒருபோதும் எங்கள் இயக்கம் இருக்காது!''

''இயக்கம் தொடங்க என்ன காரணம்?''

''சமூகக் கூச்சமும், தார்மிக அச்சமும் இல்லாத மலினமான மனிதர்களால் அரசியல் களம், சுயநல சூதாட்ட விடுதியாகி விட்டது. வஞ்சகமும் சூழ்ச்சியும் ஜனநாயகத்தின் தலையில் மிதிக்கும் தறுதலைத்தனங்களும் அரசியலுக்கான தகுதிகளாகி விட்டன. பணமே, அரசியலை இயக்கும் அச்சாணியாக இருக்கிறது. உண்மை, நேர்மை, தூய்மை, எளிமை, தியாகம், தன்னல மறுப்பு போன்ற காந்தியக் கொள்கைகள் மறந்து போய்விட்டன. நச்சும் புகையுமாகக் கரிபிடித்துக் கிடக்கும் நமது அரசியல் நுரையீரலை சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயமும் இக்கட்டும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள், 'காந்திய அரசியல் இயக்க'த்தை ஆரம்பிக்கப் போகிறேன்..!''

''பெரிய பெரிய அரசியல் கட்சிகளே கூட்டம் சேர்க்க முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கையில், பொருளாதாரப் பின்புலமே இல்லாமல் இயக்கம் தொடங்கி எழுச்சியை உண்டாக்குவதெல்லாம் நடக்குற காரியமா?''

''வாழ்க்கையே நம்பிக்கை என்கிற நரம்புகளில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. வல்லமை கொண்ட பிரிட்டிஷ்காரர்களை எளியவரான காந்தியின் முனைப்பும் நினைப்பும்தானே இந்தியாவை விட்டு விரட்டி அடித்தது! சுதந்திரத்துக்குமுன்னர் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி. ஒத்துழை யாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள் ளையனே வெளியேறு இயக்கம் என 1920-ல் இருந்து 1942 வரை அடுத்தடுத்த பத்தாண்டு கால இடை வெளிகளில் மூன்று பெரிய போராட்டங்களை காந்தி நடத்தினார். அவற்றில் கலந்துகொண்டு சிறை சென்றவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் குறைவுதான். முப்பது கோடி மக்களுக்கான சுதந்தி ரத்தை ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்களின் போராட்டங்கள்தான் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அப்படியிருக்க, தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களை விழிப்படையச் செய்ய, எனக்கு ஒரு லட்சம் பேர் போதாதா? இன உணர்வும், மொழிப் பற்றும், பொது வாழ்க்கைப் பிடிப்பும் கொண்ட ஒரு லட்சம் பேரைத் திரட்டி, கழிவுக்காடாகக் கிடக்கும் தமிழகத்தை கண்டிப்பாக முகம் மாற்ற முடியும்.

இந்த சாதாரண சமூகத்தானால் லட்சம் பேரைத் திரட்ட முடியுமா? எனக்கும் இது புரியாமலில்லை... ஆனால், எத்தனை பேரை சேர்க்க முடியும் என்பதல்ல என் கவலை. தன்னலமற்ற நோக்கத்தை நோக்கி ஓடும் வல்லமை கொண்ட கூட்டம்தான் எனக்குத் தேவை... பெரும் கும்பல் தேவை இல்லை. வசதிகளோடு சொகு சாகிக் கிடக்கும் மேல்தட்டு மனிதர்கள், சமூகத்தின் மீது அக்கறைப்பட வேண்டிய அவசியமற்று உலவுகிறார்கள்; வறுமைக்கு வாக்கப்பட்டுக் கிடக்கும் கீழ்த்தட்டு மக்கள், பசியைத் தீர்க்கவே வழியற்றுத் தவிக்கிறார்கள்.

இரண்டுக்கும் இடைப்பட்டு வாழும் நடுத்தரவர்க்கம் தான் சமூகப் போராட்டங்களில் களமிறங்க வேண்டும். ஆனால், இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினரை டி.வி. பெட்டிகளுக்குள்தான் தேட வேண்டி இருக்கிறது. ஊடக போதையில் மயங்கிக் கிடக்கும் அவர்களின் மதி மழுங்கடிக்கப்பட்டு விட்டது. மானாடுவதும் அசத்தப் போவதும் அவர்களின் அறிவை அட்டையைப் போல் உறிஞ்சி விட்டது. அதனால் நடுத்தர வர்க்கம் செய்ய வேண்டிய கடமை, நிறைவேற்ற ஆள் இல்லாமல் அனா மத்தாகக் கிடக்கிறது. ஆனாலும், சமூகக் கடமைக்கான கூக்குரலை எழுப்பவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காக நான் யாரையும் கையைப் பிடித்து இழுக்கப் போவதில்லை. மாற்றத்துக்காக ஏங்கு பவர்கள் மட்டும் என்கூட வந்தால் போதும். யாரும் வரவில்லை என்றால், நான் மட்டுமே இலக்கு நோக்கி நடப்பேன். சமூக நலன் சார்ந்த நிறைய இளைஞர்கள் சமீபகாலமாக என் கண்ணில் படுகிறார்கள். பெரியாரைப் போல, காந்தியைப் போல அரசியலுக்கு வெளியே நின்று போராட என் இயக்கம் தயாராகி விட்டது. அதனால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஆயிரம் பேர் சேர்ந்தாலே போதும்... காந்தியமும் பெரியாரிஸமும் கைகோக்கும் மையப்புள்ளியாக காந்திய அரசியல் இயக்கம் மலரத் தொடங்கி விடும்!''

''அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட வெறுப்பும் அதிருப்தியும்தான் உங்களை தனி இயக்கம் காண வைத்ததா?''

''வெறுப்பு, அதிருப்தியுடன் நம்பிக்கையின்மையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நாற்பதாண்டு கால அரசியல் வாழ்வில் எத்தனையோ அரசியல்வாதிகளைப் பார்த்து விட்டேன்; பழகி விட்டேன். அவர்களின் உண்மை முகம் அருவருப் பானதாக இருக்கிறது. ஆட்சி நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிகிற கலைஞர்... ஆட்சிக் கேடுகளைத் தட்டிக் கேட்கிற தகுதியற்ற, தைரியமற்ற எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா... சோனி யாவுக்கு பல்லக்குத் தூக்குவதைத் தவிர, தவறியும் சமூக அக்கறை காட்டி விடாத காங்கிரஸ் தலைவர்கள்... மாறி மாறி கூட்டணி வைத்து, தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள்... இவர்களில் யாரை என்னால் நம்ப முடியும்? யாருடைய போக்கை சகித்துக்கொள்ள முடியும்? இவர்களை விட்டு விலகுவதைவிட, இவர்களை விரட்டுவதுதான் இன்றைய கட்டாயம்.''

''அப்ப விஜயகாந்த்...?''

''அவர் மட்டும் தனி அவதாரமா? கன்னத்துச் சதை தொங்குகிற வரை எவ்வித சமூக நினைப்பும் இன்றி, நடிகைகளுடன் டூயட் பாடி கோடிக்கணக்கில் சம்பாதித்த விஜய காந்த், இப்போது சமூகத்தைத் திருத்தப் போவதாக திருவாய் மலர்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் ஒரே ஒரு கேள்வியை வைக்க நான் ஆசைப்படுகிறேன்... நீண்ட நெடிய சினிமா வாழ்வில் முறையாக சம்பாதித்து, தூய்மையாக வரி கட்டி வாழ்வதாக மனசாட்சி மீது கைவைத்து அவரால் சொல்ல முடியுமா? அதற்கான அடிப்படைத் தகுதிகூட இல்லாத விஜயகாந்த், ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதாகச் சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் தே.மு.தி.க-வால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள்... ஃபைனான்ஸியர்களும், ரியல் எஸ்டேட்காரர்களும்தான் நிறைந் திருக்கிறார்கள். தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்டிக்கடை வைத்திருந்த லிங்கம் என்பவர் நிறுத்தப்பட்டாரே... அவரைப் போன்ற எளிய மனிதர்கள் யாரும் விஜயகாந்த்தின் கண்களுக்குத் தெரிய வில்லையா... இப்போதே ஏழைகளுக்குத் தேர்தலில் வாய்ப்பளிக்காத விஜயகாந்த்தா நாளைக்கு ஏழைகளுக்காக எல்லாமும் செய்யப் போகிறார்? விட்டுத் தள்ளுங்கள் அவரை...''


''உங்களுக்கு பாரதியார் விருது கொடுத்து, திட்டக்குழு உறுப்பினராக பதவி கொடுத்து கௌரவித்தவர் முதல்வர் கருணாநிதி. ஆனால், சமீப காலமாக அவரை மூத்த அரசியல் தலைவர் என்றுகூட எண்ணாமல் கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே...?''


''அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஊழலில் திளைத்தேறிய கட்சிகள். அதேசமயம், அடித்தட்டு மக்களைச் சென்று அடைகிற வகையில் திட்டங்களை நிறை வேற்றுவதிலும், தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், ஓய்வறியா உழைப்பைக் காட்டுவதிலும் வியக்க வைப்பவர்தான் கலைஞர். ஆனால், அவர் மீது எனக்கு இப்போது இருப்பது - தாங்க முடியாத வருத்தமும், நினைத்து நினைத்துக் குமுற வைக்கும் கோபமும்தான். எந்த இனத்தையும் மொழியையும் வைத்து ஐந்து முறை அவர் முதலைமைச்சராக மகுடம் சூட்டிக் கொண்டாரோ... எதை வைத்து பெயர், புகழ், செல்வம், செல் வாக்கு என எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டாரோ... அந்த இனத்துக்கு ஒரு துயர் வந்தபோது, அவர் பொங்கி வெடித் திருக்க வேண்டாமா? அவருடைய இதயத் தசைகள் துடித்திருக்க வேண் டாமா... ஆனால், அதிகாரத்தைக் காப் பாற்றிக்கொள்ள வேண்டிய ஒற்றைக் காரணத்துக்காகத் தன் இனத்துக்கு நேர்ந்த அத்தனை கொடூரங்களையும் கை கட்டி வேடிக்கை பார்த்தாரே... அதை எப்படியய்யா மறக்க முடியும்?!

இன்றைய கால ஓட்டம் கலைஞரின் துரோகத்தை மறந்தாலும் மறைத்தாலும், நாளைய வரலாறு கண்டிப்பாக மறக்காது... மன்னிக்காது..! இப்போதும் அடித்துச் சொல் கிறேன்... கலைஞர் நினைத்திருந்தால், ஈழத்தில் இவ்வளவு பெரிய அவலம் கண்டிப்பாக நடந்திருக்காது. நாற்பது எம்.பி-க்களை வைத்திருந்த கலைஞர், சோனியாவின் அரசுக்கு எதிராகக் கொந்தளித்திருந்தால், ஈழம் இழவுக்காடாக மாறி இருக்காது..! ஆனால், நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்கிற நடுக்கத்தில் கலைஞர், இன அழிவு குறித்து இம்மியளவும் கவலை கொள்ளாதவராக இருந்தாரே... அந்த துரோகத்தை மறந்துவிட்டு, அவருக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டே இருந்திருந்தால், இன்னும் எனக்கு நிறைய நன்மைகளை அவர் செய்திருப்பார். ஆனால், இந்த சரீரத்துக்குள் ஓடும் ரத்தம் சாக்கடையாக இருந்தால்தான், தமிழருவியால் கலைஞரின் துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க முடியும்!''


''உங்களைப் பற்றி, 'தாவுவதற்கு இனி வேறு கட்சி இல்லாததால்தான் தனி இயக்கத்தில் தமிழருவி இறங்கி விட்டார்' என சிலர் நக்கலடிப்பார்களே...?''


''காமராஜ் என்கிற தன்னலமற்ற தலைவரின் வழியில் காங்கிரஸில் சேர்ந்தவன் நான். காமராஜரின் திருவாயால் 'தமிழருவி' என அழைக் கப்பட்டவன். 1969-ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோதும்... ஸ்தாபன காங்கிரஸில் காமராஜருக்கு பக்கத்தில்தான் இருந்தேன். ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாவானது. பின்னர் ஜனதா, ஜனதா தளமானது. நான் அவற்றில் இருந்தேனே தவிர, எந்தக் கட்சிகளையும் நோக்கி ஓடவில்லை. ஜனதா தளத்தில் இருந்து வடிவேலு என்னை வெளியேற்றியபோது, ராமகிருஷ்ண ஹெக்டேவால் லோக் சக்திக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் லோக்சக்தி, பி.ஜே.பி-யுடன் கூட்டு வைத்தபோது, காமரா ஜரின் மதசார்பின்மை கருத்தை மனதிலேற்றி வைத்திருந்ததால், நான் அங்கிருந்து வெளியே றினேன். தமிழ் மாநில காங்கிரஸை ஜி.கே.மூப்ப னார் தொடங்கியபோது, என்னை பாசத்தோடு அழைத்ததால் அங்கே போனேன். பின்னர் த.மா.கா-தான் காங்கிரஸில் இணைந்ததே தவிர, நானாக எங்கும் போகவில்லை. மழுங்கிய உளியைத் தூக்கிப் போட்டுவிட்டு, சிலையை வடிப்பதற்காக அடுத்த உளி எடுக்கும் சிற்பியைப் போலத்தான் நான் இயங்கினேன். ஒரே வீட்டில் இறக்கும் வரை இருப்பதனாலேயே ஒரு விலைமகள், கண்ணகி ஆகிவிட மாட்டாள். புகாரில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டதாலேயே கண்ணகி கற்பிழந்தவளாகி விடமாட்டாள். நான் கண்ணகியைப் போல் கம்பீரம் கலையாத கற்புள்ள அரசியல்வாதி!''- ஆவேசம் குறையாமலே விடை கொடுக் கிறார் அருவி!