Tuesday, July 7, 2015

பாபநாசம் -- கமலுக்கு முழு திருப்தியாக அமைந்த படம்

இந்த படத்தின் விமர்சனங்களில் அதிகம் பேசப்படும் பொருள் அசலைவிட அருமை என்று ஒரு புரம் மறுமையில் இல்லவே இல்லை என்றும் பேசப்படுகிறது.

அசலை பார்த்தவர்கள் சொல்லும் நுணுக்கமான வித்தியாசங்களும் அப்படி தான், உதாரணமாக அசலில் என்ன நடந்ததுன்னு சொல்ல இல்லை இனி உங்க அப்பா அம்மாவை பார்க்க முடியாது என்று அந்த சிறுமியை மிரட்டும் காட்சிக்கு அடுத்து வரும் அந்த நெகிழ்வு மன்னிப்பு காட்சிகள் தமிழில் இல்லை. அழகாக சுருக்கமாக அசலில் வரும் வசனமும் சரி நடிப்பும் தமிழில் இல்லை.

அசலில் வரும் டீக்கடை காட்சிகளில் அப்படி ஒரு வறட்சி காட்சியிலும் சரி வசனத்திலும் சரி.

அசலில் தேக்கடி என்று ஒரு 100 தடவையாவது சொல்லி இருப்பார்கள், தமிழில் தவிர்த்துவிட்டார்கள். அசலில் விசாரணையில் முதல் சுற்றுக்கு பிறகு என்ன நடக்கும் என்று கேட்கும் காட்சியில், இல்லை மீண்டும் வருவார்கள் என்று சொல்லி விளக்கும் காட்சிகளிலும் தமிழில் அப்படி ஒரு வறட்சி. அசலில் அந்த அப்பா காட்டும் அக்கரையிம் பாசமும் தமிழில் இல்லை.

படம் ஒரு கட்டத்திற்கு மேல் மகாநதியின் இரண்டாம் பாகம் பார்ப்பது போல் இருக்கிறது. மூத்த மகளின் பாத்திரத்தின் குரலில் அப்படி ஒரு பஞ்சம். போராளி படத்தில் தெளிவாக வந்த அந்த குரல் எங்கே போனதோ அவர்களுக்கு தான் வெளிச்சம்.

படபிடிப்பு துவங்கிய உடன் வந்த விமர்சனங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது உன்னை போல் ஒருவன் போல் ஒரு இந்திய தாலிபான் பாசக பரப்புரை படமாக இருக்குமோ என்றும் கூட பயமாக இருந்தது. நல்ல வேளை அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை.

கமல் பேசும் வட்டார வழக்கு மைகேல் மதன காமராசன் படத்தின் காமேசுவரன் பேசுவது போல் இருக்கிறது.

இந்த மாற்றங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், காட்சிக்கு காட்சி, வசனத்திற்கு வசனம் அப்படியே தமிழில் எடுத்து இருக்கிறார்கள். கமலின் மாமா வீட்டில் திருமணத்தின் போது சீர் எதுவும் பெரிதாக செய்யவில்லையே என்ற பேச்சுகளை எல்லாம் ஏன் வெட்டி விட்டார்கள் தமிழில் தெரியவில்லை. மச்சானுக்கும் மானனுக்கும் நடக்கும் அந்த நெகிழ்வான வசனம்மும் அந்த பையனின் உடல் என்ன ஆனது என்ற கௌதமியின் கேள்விகளுக்கு பதிலும் ஏன் தமிழில் தவிர்த்துள்ளார்கள் என்று தெரியவில்லை.

மோகன்லாலின் கண்களின் நடிப்பும், சந்தர்பங்களி வரும் அசட்டு சிரிப்பும் தமிழில் இல்லை என்றது தான் உண்மை ஒரு வேளை கமலின் தகுதிக்கு அவைகள் தேவை இல்லை என்று விட்டிருப்பர்கள் போலும்.

தாம்பத்திய விவகாரங்களை மிகவும் அழகாக அசலில் காட்டி இருப்பார்கள், அவர்கள் இன்னமும் இளம் தம்பதிகள் என்று காட்டும் விதமாக. அவைகள் அனைத்தையும் தமிழில் தொடைத்து எடுத்துவிட்டார்கள். ஒரு வேளை கௌதமிக்கு பதில் வேறு யாரோவாக இருந்தால் புன்னகை மன்னன் முத்த காட்சிவரை காட்டி இருப்பார்கள் போலும்.

சரி தலைப்புக்கு வருவோம், இது வரை கமலிம் படம் வந்தால், இந்த காட்சி, வசனம், கதை இந்த படத்தில் இருந்து எடுத்தது அப்படி இப்படி என்று எல்லாம் விமர்சனங்கள் வரும்.

ஆனால் இந்த படம் அந்த ஒட்டு மொத்த விமர்சனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டது. இந்த விமர்சனங்கள் இல்லாத படம் என்று கமல் முழு திருப்தி அடைந்து இருப்பார்.