Tuesday, January 5, 2016

தழைக்கட்டும் மனித நேயம் - நல்ல மக்கள் என்றும் தொலைந்து போய்விடவில்லை

சமீபகாலமாக வரும் படங்களும், கதைகளும் கட்டுரைகளிலும் சரி காலம் மாறிப்போச்சுங்க, இப்ப எல்லாம் அப்படி இல்லைங்க என்று சொல்வது வழக்கமாக ஆகிக்கொண்டே வருகிறது.

மனிதர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கித்தான் அவன் வாழமுடியும் என்பது போல் ஒரு தோற்றத்தை அந்த வசனங்கள் அர்த்தப்படுத்திக்கொண்டு வந்தது.

அதாவது பொருட்களின் இருப்பு இவ்வளவு தான் என்பது போலவும் அதை ஒருவனிடம் இருந்து பிடுங்கித்தான் மற்றவன் வாழ்க்கை நடத்தமுடியும் என்றது போல் இருந்தது அந்த தோற்றம்மும் அதன் தேற்றமும்.

ஆனால் உண்மையோ வேறு என்று உலகுக்கு புரிய வைத்தது சென்னை வெள்ளம். எத்தனை காலம் தாண்டினாலும் மனிதன் என்றுமே மனிதனாகத்தான் இருப்பான்.

தனது பக்கத்து வீட்டார் படும் துன்பத்தை பார்த்து கதவை சாத்திக்கொண்டு தொலைகாட்சி தொடர்பார்த்து இரசிப்பவர்கள் இல்லை இவர்கள் என்று நிரூபித்துள்ளார்கள் மீண்டும்.

இந்த மக்களில் ஆண், பெண், சாதி, மதம், ஊர், மாவட்டம், மாநிலம், மொழி எல்லாம் ஒன்றும் இல்லை, வள்ளுவன் சொன்னது போல் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற உண்மையை மறுபடியும் உதாரணத்துடன் நிறுவி காட்டினார்கள் மக்கள்.

பொதுமக்கள் கொட்டிய பொருளுக்கும், உழைப்புக்கும், அன்பிற்கும் அளவே கிடையாது. நேசக்கரம் நீட்டிய அந்த மக்களின் மன நிலைதான் அனேக மக்களின் மன நிலையும்.  இத்தனை நாள் மறைபொருளாக மறைக்கப்பட்ட மாயை விலகி வெளிகொண்டு வந்த இயற்கைக்கு நாம் நன்றி சொல்வோம்.

நாட்டின் எல்லைக்கு ஆபத்து வரும் சமயங்களில் உணர்ச்சி பொங்க எழும் ஒற்றுமை என் சக மனிதனின் வாழ்வை பறிக்கும் சந்தர்ப்பத்திலும் வெளிப்படும் என்றும் உணர்த்தியுள்ள அந்த உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துவோம்.

சின்ன வயதில் ஒரு கரடி கதை சொல்வார்கள், அந்த கரடி உன் காதில் என்ன சொன்னது என்று கேட்டதிற்கு ஆபத்தில் தான் உன் உண்மையான நண்பர்கள் யார் என்று தெரியும் என்று சொன்ன தத்துவத்தை அழகாக மக்களுக்கு இக்கட்டான காலத்தில் உணர்த்தி சென்றது இயற்கை.

தொண்டாற்றிய அந்த உயர்ந்த உள்ளங்களை வாழ்த்தி வணங்கி 2016 துவங்குவோம்.

0 comments: