Friday, September 4, 2009

சேஞ்சுலிங்கு(Changeling) –திரைவிமர்சனம்


2008ல் வந்த படம் இது, ஆனால் கதையின் காலம் 1928. படம் துவக்க காட்சியில் இருந்து பிரம்மிப்பு தான். 1928ல் உள்ள தொலை பேசி இணைப்பகம், இலாசு ஏஞ்சலசு நகரம், நடை, உடை, தோற்றம் என்று கிளின்டு ஈசுட்டுஉட்டு அசத்து அசத்து என்று அசத்துகிறார்.



இது வரையில் வான்டட்(Wanted) படம் வரையில் பார்த்துவந்த வீராங்கனை நடிகை ஏஞ்சலீன சோலி 1928ல் உள்ள பெண்மணிக்கே உள்ள பதட்டம், பொருமை, அடக்கம் என்ற அத்தனையும் அழகாக அவரது முகதிலேயே கொண்டுவந்து காட்டுகிறார்.



படத்தில் அவ்வப்போது காட்டும் இடிராம்(Tram) வண்டிகளும், சீருந்து(Car) வண்டிகள், புகைவண்டி காட்சியின் அந்த காலத்தோடு நம்மை பார்க்க வைக்கும் படம். இவைகள் எல்லாம் பின் இணைப்பு வேலைகளாக தான் இருக்க வேண்டும் அனேகமாக அரங்கமைத்து படமாக்கப்பட்டதாக தெரியவில்லை.



1928ல் அமெரிக்க பெண்மணிகள் கூட இந்திய பெண்மணிகள் போல் பேச்சும், செயலும் சுதந்திரம் கொடுக்கப்படாமல் அடக்கிவைக்கப்பட்டு இருந்தார்கள் என்று அழகாக படம் பிடித்து காட்டுகிறார்கள்.



அடக்கமாக அழுவதும், எதிர்த்து பேசவே பயப்படும் பாத்திரமாக ஏஞ்சலீனா, அவரை மிரட்டியே காரியம் சாத்திக்கும் காவலர்கள் என்று படம் சூடு பிடிக்கின்றது. படத்தின் அந்த பகீர்காட்சி இதோ.



இந்த காட்சியில் துவங்கும் முடிச்சு கதையின் முடிவுவரை தொடர்வது கதையிலும், திரைகதையிலும் அந்த குழுவுக்கு உள்ள தேர்தியை காட்டுகிறது.

காவல்துறையே ஆனாலும் தவறு என்றால் தவறு தான் என்று கவல்துறை தலைவரையும், அந்த மிரட்டல் பேர்வழியையும் நீதிமன்றம் வேலை நீக்கம் செய்யும் போது ஏஞ்சலீனா விடுக்கும் அந்த மெல்லிய புன்னகை அருமையான நடிப்பு.



படம் பார்க்காதவர்களின் சுவாரசியம் கெட்டுவிடும் என்ற காரணத்தால் சுருக்கமாக கதை இதோ.



ஏஞ்சலீனாவின் சிறிய வயது மகன் திடீர் என காணாமல் போகின்றான். எங்கே என்று தேடி அலைகிறாள் அந்த அபலை தாய். திடீர் என்று ஒரு நாள் காவலர்கள் பிள்ளையை தேடி கண்டுபிடித்து விட்டதாக ஒரு பையனை ஏஞ்சலீனாவிடம் தினித்துவிட்டு செல்கிறார்கள்.

இது எனது மகன் இல்லை என்று பயந்த பெண்ணாக அவர் காவலர்களுடன் மெல்லிய வாதம் புரிய, இது தான் உனது மகன் மற்றும் ஒரு முறை இல்லை என்று வாதிட்டால் விளைவு வேறு மாதிரியாக இருக்கும் என்று மிரட்டபடுகிறாள் ஏஞ்சலீனா.



மகனின் அங்க அடையாளங்களையும், மற்றும் பள்ளி ஆசிரியை, பல் மருத்துவர்களது துணையுடன் செய்தி இதழ்களுக்கு இது எனது மகன் இல்லை என்று அறிவிக்க. காவல்துறை ஏஞ்சலீனாவை பைதியகாரி என்று பட்டம் கட்டி மன நல மருத்துமனையில் அடைகிறார்கள். அங்கே வைத்து இது தான் எனது மகன் என்று எழுதிவாங்க முயற்சி எடுகிறது காவல்துறை.



நல்ல மனம் கொண்ட சிலரால் ஏஞ்சலீனா மீட்கப்பட்டு, காவல்துறையின் மேல் வழக்கு தொடுக்கிறார்கள் அவர்கள். இந்த முறை அந்த காவல்துறையின் அடக்குமுறைகளுக்கு கைகூலிகளாக வேலை செய்யும் அனைவரையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கிறது நீதிமன்றம்.

ஒரு கட்டத்தில் படம் இவ்வளவு தான் என்று நினைக்கும் தருவாயில், கிளின்டு ஈசுடுஉட்டு காணாமல் போன பையனை மறந்துவிட்டீர்களே என்று கதை தொடருகின்றது. தொடர்ந்து எழுதினால் கதையின் முடிச்சுகள் வெளிப்படும் என்று கதையை இதோடு நிறுத்திகொள்கின்றேன்.



இந்த கதை தமிழில் வருவதற்கு நிறைய வாய்புகள் உண்டு, தவிர தமிழில் இப்படி பெண் வாழ்கையை தொலைத்த கதைகளை எடுத்தால் நன்றாகவும் ஓடும். என்ன இந்த அளவிற்கு கால நினைவுகளோடு இல்லை என்றாலும், இரு கிராமத்திலோ அல்லது நகரத்து வாழ்க்கையாக அருமையாக எடுக்க உகந்த திரைகதை இந்த திரைகதை. எதிர்பார்ப்போம் தமிழில் விரைவில்.

0 comments: