Tuesday, April 13, 2010

அவள் பெயர் தமிழரசி - திரைவிமர்சனம். (லேவ் டால்சுடாயின் புத்துயிர்ப்பு)

இந்த படத்தின் காட்சி பிம்பங்களை பார்த்ததும் படம் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். படத்தை பார்க்க துவங்கியதும், வாழ வழியில்லா கூத்துகாரர்களையும் அந்த பணக்கார சிறுவனையும் இணைத்துக்காட்டும் போதே படம் விவகாரமாகத்தான் இருக்கும் என்று விளங்கியது.

கதை சிறுபருவம் முதல் காளையர் பருவம் வரையில் வரும் வரையில் புத்துயிர்ப்பின் சாயல் இல்லை. ஏதோ ஒரு கிராமத்து கதை என்று தான் இருந்தேன். பிறகு அந்த நிகழ்வுக்கு பிறகு கதையில் அடிக்கும் புயலும். அந்த புயலில் நாயகியின் வளர்ந்து வந்த வாழ்க்கை தொலந்து போவதும். நல்ல நெறி, நல்ல வாழ்க்கை என்று இருந்தவளை வலுக்கட்டாயமாக புழுதியில் தூக்கி எறிவதாக டால்சுடாய் சொன்ன அந்த புத்துயிர்ப்பின் சாயல் இங்கு இருந்து தான் வெளிப்படுகிறது.

புத்துயிர்ப்பின் கதை இது தான், ஒரு பெரும் பணக்காரன் தனது வீட்டில் வேலை செய்யும் சிறுமியுடன் வித்தியாசம் பார்க்காமல் பழகுவான். இங்கே இந்த சிறுவன் அந்த கூத்தாடிகளுடன் பழகுவது போல். பிறகு பால்ய பருவம் கடந்து காளையானதும் பணக்கார திமிரிலே அத்தனை நாட்கள் பழகிய தோழியை வன்புணர்வான். அதற்கு அவனது வயது ஒரு காரணம் என்று சொல்லிக்கொள்வான்.

இங்கே தமிழரசி பிரிந்து சென்றுவிடக்கூடாது என்று படிக்க செல்லவிருக்கும் அவளை வன்புண்ருகிறான் நாயகன்.

புத்துயிர்ப்பில் அவனது பிள்ளையை கையில் தூக்கிக்கொண்டு இரயில் நிலையத்தில் இராணுவ வண்டியில் வந்திருக்கும் நாயகனின் முகம் பார்த்து அவனது குழந்தை இது என்று காட்டிவிட வேண்டும் என்று அவள் படும் பாட்டையும், அந்த வண்டி நகரும் வரை அவன் இவளை கவனிக்காமலே இருந்தும். கூட்டத்தில் பார்க்காமல் இருந்திருப்பான் என்று வண்டி நடை மேடையை விட்டு நகரத்துடங்கியதும் வண்டியுன் ஓடி கால்களில் செறுப்பு கூட இல்லாமல் அந்த குளிரில் அந்த இளம் தளிரை அள்ளிக்கொண்டு ஓடியதை படிக்கும் போது மனதை அப்படி ஒரு பிசை பிசைந்து எடுக்கும் பாருங்கள். அந்த காட்சி எல்லாம் வர போகிறது என்று பார்த்தால். குழந்தையை கலைத்துவிட்டேன் என்று முடித்து விட்டார்.

பிறகு புத்துயிர்பில் தனது 40 வயதுகளில் அவளை தேடி அவளது வாழ்க்கையை அழித்தற்கு எப்படியாவது பிராயசித்தம் தேடவேண்டும் என்று கடந்து அலைவான். அவளையும் தேடி கண்டு பிடிப்பான். கடைசி வரையில் இவனது பிராயசித்திற்கு அவள் ஒத்துக்கொள்ள மாட்டாள். எப்படி பட்ட சமயத்தில் தெரியுமா, தனக்கு மரண தண்டனை கிடைக்க போகின்ற தருவாயில். அவளை அவனின் செல்வாக்கை கொண்டு காப்பாற்றி விடுகிறேன். அதோடு மட்டும் அல்லாது உன்னோடு சேர்ந்து வாழ்கிறேன் என்று சொன்ன பிறகும் முடியாது என்பாள். காரணம், இப்போது கூட எனது வாழ்க்கை நன்றாக இருக்கனும் என்று நினைக்காமல் உனது பாவத்திற்கு பிராயசித்தம் என்று நீ தேடுவதால் என்று மறுப்பாள்.

டால்சுடாய், அந்த பெண் பாத்திரத்தின் மூலம் பெண்களுக்கு முதலில் மரியாதை அதற்கு பிறகு தான் வாழ்க்கை செல்வம் என்று ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து கதை சொன்னார்.

அதே கருவை கொண்டு வந்த இந்த படத்தில், தனது கௌரவத்தை எல்லாம் தொலைத்து வன்புணர்ந்தவன் வாழ்க்கை தந்தாள் பிடிச்சுக்கோ. இதை விட்டால் உனக்கு வேறு கதி எல்லாம் இல்லை என்று மிகவும் சந்தர்ப்பவாத இனமாக பெண்களின் வாழ்க்கையை கீதா காட்டியுள்ளார். அதும் ஒரு பெண் இயக்குனராக இருந்துக்கொண்டு.

தமிழ் எழுத்தாளர் இலட்சுமியின் இரசிகை போல இருக்கு. அவர் தான் ஆண்களுக்கு அப்படி ஒரு சப்பைகட்டு கட்டுவார் பாருங்கள் அப்படி ஒரு கட்டு.

படத்தின் ஆருதல் விசை ஆண்டனியின் இசை. எப்படிம் குத்து பாட்டும் ஆட்டமுமாக இருக்கும் அந்த கலைஞருக்குள் இவ்வளவு கிராமிய இசையா. பாடல்களைவிட பின்னனி இசை மிகவும் அருமை.

அவள் பெயர் தமிழரசி அழுக்கு பட வரிசையில் அடுத்த படம் அவ்வளவு தான் ஒன்றும் வித்தியாசம் இல்லை.

0 comments: