Tuesday, August 25, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு- 82: தப்பினார் பிரபாகரன்! (தினமணியில் இருந்து நீக்கப்பட்ட பகுதி இது)



பாவை சந்திரன்
First Published : 21 Aug 2009 01:14:00 AM IST


தைப்பொங்கல் (1987, ஜனவரி 14) நாளிலிருந்து சுதந்திரத் தமிழ் ஈழம் அமைதல், யாழ்ப்பாணத்தில் நகர நிர்வாகத்தை மேற்கொள்ளுதல், சொந்த நாணயம் அறிமுகம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளப்போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்து, 1985 டிசம்பரில் இலங்கை நாளேடுகள் கூறியவற்றை மெய்ப்பித்தது. இதனால் இலங்கை அரசு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இணையான அரசை நிறுவுவதற்கான அறிவிப்பு இது. இதை முறியடிக்க சிங்கள அரசு தீவிரம் காட்டிற்று.

ஆனால், விடுதலைப் புலிகள் இந்தச் செயல்பாட்டை தை முதல் நாள் என்பதிலிருந்து மேலும் 17 நாள்களுக்குத் தள்ளிப்போட்டனர். ஆனால் சுதந்திரப் பிரகடனமும், நாணயம் வெளியிடுவதும் மட்டுமே தள்ளிப்போடப்பட்டது. சிவில் நிர்வாகம் என்று சொல்லப்படுகிற வாகனங்கள் பதிவு, தொலைக்காட்சி, வானொலிப் பெட்டிகள் அனுமதிப் பதிவு போன்றவற்றை விடுதலைப் புலிகள் மேற்கொண்ட செயல், உலக நாடுகளைத் திகைப்பில் ஆழ்த்தியது.

சகோதர இயக்கங்கள் மீதான விடுதலைப் புலிகளின் நடவடிக்கை, குறிப்பாக டெலோ தலைவர் ஸ்ரீசபாரத்தினம் அழிப்பு மற்றும் அவரது இயக்கத்துக்குத் தடை, பிளாட் அமைப்புகள் இயங்கத் தடை, அதே போன்று ஈபிஆர்எல்எஃப் இயக்கம் இயங்கத் தடை (இவை குறித்து பின்வரும் "விடுதலைப் புலிகள் பற்றிய வரலாற்றில்' விரிவாக ஆராய்வோம்) என அதிரடியாகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகள் கடும் பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்றுதான் இந்திய உளவு அமைப்புகள் கருதின.

மாறாக, யாழ்ப்பாணத்தில் தங்களது சிவில் நிர்வாகத்தை விடுதலைப் புலிகள் மேற்கொண்டதை எண்ணி வியந்தன

இது ஒருபுறமிருக்க, இலங்கை சிங்கள அரசு யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை அமல்படுத்திற்று. இதனால் கொழும்பு மற்றும் தமிழ்ப் பகுதிகளின் எல்லைப்புறத்திலிருந்து எந்தப் பொருளும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லமுடியவில்லை. இதனால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளானார்கள். மின்சாரம், பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்னெய் அனுப்புவது நிறுத்தப்பட்டது. நாளடைவில் யாழ்ப்பாணப் பகுதியில் விளையும் பொருள்கள் தவிர ஏனைய பொருள்கள் யாவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.


இதரப் போராளிகள் இயக்கங்களுக்கு விடுதலைப் புலிகள் தடை விதித்த காரணத்தால், தங்கள் மீதான எதிர்ப்பின் வலு குறைந்துவிடும் என்றும் ராணுவம் மூலமான இறுதித் தீர்வை எட்ட இதுவே சரியான தருணம் என்றும் ஜெயவர்த்தனா அரசு கருதியது.

போராளிகள் ஆதிக்கத்திலிருந்து யாழ்குடா நாட்டை மீண்டும் கைப்பற்றுவதற்கான வழிவகைகளைக் கண்டறிந்து மே மாதம் 18-ஆம் தேதி "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற யுத்தத்தை ஜெயவர்த்தனா அரசு தொடங்கிற்று. இதற்கான உளவுத் தகவல்களை இஸ்ரேல் போன்ற நாட்டினது உதவியுடன் அரசு பெற்றிருந்தது. இந்தப் போருக்குண்டான திட்டங்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சர் லலித் அதுலத் முதலி அதிக முனைப்புடனும் ஒரு வெறியுடனும் செய்திருந்தார்.

தம் சொந்த மக்களையே வஞ்சிக்கும் ஒரு குரூரப் போக்குடன் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டுகளைப் பொழிந்ததால் மக்கள் அடைந்த துன்பம் அளவிடற்கரியதாயிற்று. நகரில் எங்கு பார்த்தாலும் மரக்கட்டைத் தடுப்புகளை ராணுவம் அமைத்திருந்தது. வண்டிகள் சுலபமாகச் சென்றுவர முடியாதபடி போக்குவரத்து தடைப்பட்டது.

ஆனையிறவிலிருந்து வடமேற்காக ராணுவத் துருப்பு ஒன்று சென்றது. அப்போது கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று தடுப்புக்கட்டைகளைப் பார்த்ததும் நின்றது. பயணிகள் சிலர் இறங்கிக்கொண்டனர். வேறு சிலர் சாலையின் குறுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கட்டைகளை அகற்றி பயணம் மேற்கொண்டனர். இது கண்ட ராணுவத்தினர் அதில் போராளிகள்தான் போவதாகக் கருதி அந்தப் பேருந்தை நோக்கி குண்டுமழை பொழிந்தனர்.

இதேபோன்று நாவற்குழியிலும், பலாலியிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இவ்வகையான தடுப்புகளை மன்னார் மாவட்டத்தில் மேற்கொண்டபோது, அப்பகுதியின் விடுதலைப் புலிகள் கர்னல் ராதா தலைமையில் சொற்ப வீரர்களுடன் சென்று பெருந்தொகை ராணுவத்தினருடன் மோதி உயிர்துறந்தனர்.

ராணுவம் அச்சுவேலி என்கிற பகுதியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த வேளையில், விடுதலைப் புலிகள் பெருமளவில் வந்து தாக்குதலில் ஈடுபட்டனர். வான்வெளியில் அரசின் போர் விமானங்கள் எதிர்ப்பு எதுவுமின்றி இயங்கிக்கொண்டிருந்த நிலையில் அவ்வப்போது குண்டுகளையும் வீசிக்கொண்டிருந்தன.

தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சி என்கிற பெயரில் ஏற்படுத்தப்பட்ட வானொலி ஒலிபரப்பு, யாழ் வானொலி ஒலிபரப்பாக மாறி யுத்தம் சார்ந்த தகவல்களை அறிவித்துக்கொண்டிருந்தது. இந்தத் தகவல்கள் அடிப்படையில் அந்த வானொலி யாருக்கானது என்பது கண்டுபிடிக்க இயலாததாக இருந்தது. மக்களைத் திட்டமிட்டுக் குழப்பும் வேலையில் இந்த வானொலி இயங்கியது.

அப்போதைய ஈழப் பத்திரிகைகள், இந்த வானொலி அறிவிப்புகளைக் கேட்டு, சிலசமயம் விடுதலைப் புலிகளின் வானொலி என்றும், சில அறிவிப்புகளைக் கேட்டு ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சார்ந்தவர்களின் ஒலிபரப்பு என்றும் தோன்றும்படியான செய்திகளை வெளியிட்டு வருவதாகத் தகவல் தெரிவித்தன. இப்படியொரு அறிவிப்பில், விடுதலைப் புலிகளின் தளபதிகளான மாத்தையா, கிட்டு ஆகியோரின் திருமணத் தகவல்களும் இடம்பெற்றன.

மே, 27-ஆம் தேதி அறிவிப்பில் ஒரு தகவல் கூறப்பட்டது. யாழ்குடா நாட்டிலிருந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி, அகதி முகாம்களாக அறிவிக்கப்பட்டிருந்த தேவாலயங்களுக்கும் பாடசாலைகளுக்கும் செல்லும்படி ஒலிபரப்புச் செய்தி கூறியது. இந்த அறிவிப்பின் மூலம் அந்த வானொலி பலாலியில் அமைந்திருந்த ராணுவ முகாமிலிருந்து ஒலிபரப்பாவது உறுதியானது.

வடமராட்சியின் மக்கள் வசிக்கும் பகுதி அடுத்தடுத்து இருந்தபடியாலும் தொண்டமானாறு கடலேரியிலிருந்து செல்லும் பகுதி திறந்தவெளியாகவும் வடமராட்சியை யாழ்ப்பாணத்திலிருந்து பிரிப்பதாகவும் இருந்தது. இதன்காரணமாக வானிலிருந்து பார்க்க மக்களின் நடமாட்டம் எளிதில் காணக்கூடியதாக இருந்தது.

இந்தப் பகுதியில் ராணுவம் தனது தாக்குதலை அவ்வப்போது தொடுத்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வல்வெட்டித்துறையில் இருக்கிறார் என்ற தகவலைப் பெற்ற ராணுவம் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்தது. ஆனாலும் பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இவர் தங்கியிருந்த வர்த்தகர் வீடு, அதன் பின்னர் குண்டுவீச்சில் தகர்க்கப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.


நாளை: ராஜீவுக்கு நெருக்கடி!

0 comments: