ஐயா அவர்களை இல் சந்தித்து எங்களது வருத்தங்களை தெரிவித்த போது. எங்களிடம் அவர் கொடுத்த வாக்குறுதி இது. தாயகம் திரும்பியதும் ஒரு ஊருக்கு 2 என்ற கணக்கில் இளைஞர்கள் வந்தால் போதும், தமிழகத்தை திருத்திவிடலாம் என்றார். முதலில் அவர் சொல்வது ஆருதலுக்காக என்று இருந்தாலும். அவர் சொன்ன வார்த்தைகளின் செயலாக்கம் பார்க்கும் போது நெஞ்சம் பெருமையில் ததும்புகிறது.
இந்த வயதிலும் இவ்வளவு வேகமும் தீர்க்கமும், எதிர்காலத்தை கணித்து செயல்பட உங்களை போல் இன்னமும் பலர் தமிழ்மண்ணில் வரவேண்டும்.
விகடனுக்கு அவர் கொடுத்திருக்கும் செவ்வி இதோ விகடனின் வார்த்தைகளில்.......
"நயந்தோ பயந்தோ பேசத் தெரியாதபேச்சாளர் தமிழருவி மணியன். பேச்சைப் போலவே தான் எழுத்தும்... நியாயம் பிறழாத மிடுக்கும், சமூகக் கேடுகளின் மீதான கோபமும் மணியனின் எண்ணங்களில் எப்போதுமே நர்த்தனமாடும். ஈழத் துயரங்கள் தமிழகத்தைத்துக்கத்தில் ஆழ்த்தி யிருந்த வேளையில்... உயிரையே உதறி வீசிய உணர் வாளர்களுக்கு நிகராக, தான் வகித்த திட்டக்குழு உறுப்பினர் பதவியைத் துறந்த தமிழருவி மணியன், காங்கிரஸ் கட்சிக்கும் முழுக்குப் போட்டார். இப்போது 'காந்திய அரசியல் இயக்கம்' என்ற தனி இயக்கத்தைத் தொடங்கவிருக்கிறார். ஏன் இந்த முடிவு? அவரைச் சந்தித்தபோது...
''இருக்கிற கட்சிகள் போதாது என்று, உங்கள் காந்திய அரசியல் இயக்கம் வேறா?''
''காந்திய அரசியல் இயக்கம் என்பது கட்சி கிடையாது. அதிகார அரசியலுக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கம். எங்க ளுக்கு எந்தக் கட்சியும் எதிரியில்லை. மக்கள் நலனுக்கு மாறாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை எதிர்ப்பதுதான் எங்கள் இயக்கத்தின் நோக்கம். ஊழலுக்கு உற்சவம் நடத்தும் அரசியல்வாதிகளையும், அதிகார வர்க்கத்தினரையும் எவ்வித சமரசமும் இல்லாமல் எதிர்ப்போம். சமூகத் தீமைகளைக் களையெடுப்போம். சுயநல வேட்டையில் சுரண்டிக் கொழுக்கும் கட்சிகளில் ஒன்றாக ஒருபோதும் எங்கள் இயக்கம் இருக்காது!''
''இயக்கம் தொடங்க என்ன காரணம்?''
''சமூகக் கூச்சமும், தார்மிக அச்சமும் இல்லாத மலினமான மனிதர்களால் அரசியல் களம், சுயநல சூதாட்ட விடுதியாகி விட்டது. வஞ்சகமும் சூழ்ச்சியும் ஜனநாயகத்தின் தலையில் மிதிக்கும் தறுதலைத்தனங்களும் அரசியலுக்கான தகுதிகளாகி விட்டன. பணமே, அரசியலை இயக்கும் அச்சாணியாக இருக்கிறது. உண்மை, நேர்மை, தூய்மை, எளிமை, தியாகம், தன்னல மறுப்பு போன்ற காந்தியக் கொள்கைகள் மறந்து போய்விட்டன. நச்சும் புகையுமாகக் கரிபிடித்துக் கிடக்கும் நமது அரசியல் நுரையீரலை சுத்தப்படுத்த வேண்டிய கட்டாயமும் இக்கட்டும் இப்போது ஏற்பட்டிருக்கிறது. இதற்காகத்தான் காந்தி பிறந்த அக்டோபர் இரண்டாம் நாள், 'காந்திய அரசியல் இயக்க'த்தை ஆரம்பிக்கப் போகிறேன்..!''
''பெரிய பெரிய அரசியல் கட்சிகளே கூட்டம் சேர்க்க முடியாமல் குழம்பிக் கொண்டிருக்கையில், பொருளாதாரப் பின்புலமே இல்லாமல் இயக்கம் தொடங்கி எழுச்சியை உண்டாக்குவதெல்லாம் நடக்குற காரியமா?''
''வாழ்க்கையே நம்பிக்கை என்கிற நரம்புகளில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. வல்லமை கொண்ட பிரிட்டிஷ்காரர்களை எளியவரான காந்தியின் முனைப்பும் நினைப்பும்தானே இந்தியாவை விட்டு விரட்டி அடித்தது! சுதந்திரத்துக்குமுன்னர் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி. ஒத்துழை யாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், வெள் ளையனே வெளியேறு இயக்கம் என 1920-ல் இருந்து 1942 வரை அடுத்தடுத்த பத்தாண்டு கால இடை வெளிகளில் மூன்று பெரிய போராட்டங்களை காந்தி நடத்தினார். அவற்றில் கலந்துகொண்டு சிறை சென்றவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்துக்கும் குறைவுதான். முப்பது கோடி மக்களுக்கான சுதந்தி ரத்தை ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்களின் போராட்டங்கள்தான் பெற்றுக் கொடுத்திருக்கிறது. அப்படியிருக்க, தமிழகத்தில் உள்ள ஆறரை கோடி மக்களை விழிப்படையச் செய்ய, எனக்கு ஒரு லட்சம் பேர் போதாதா? இன உணர்வும், மொழிப் பற்றும், பொது வாழ்க்கைப் பிடிப்பும் கொண்ட ஒரு லட்சம் பேரைத் திரட்டி, கழிவுக்காடாகக் கிடக்கும் தமிழகத்தை கண்டிப்பாக முகம் மாற்ற முடியும்.
இந்த சாதாரண சமூகத்தானால் லட்சம் பேரைத் திரட்ட முடியுமா? எனக்கும் இது புரியாமலில்லை... ஆனால், எத்தனை பேரை சேர்க்க முடியும் என்பதல்ல என் கவலை. தன்னலமற்ற நோக்கத்தை நோக்கி ஓடும் வல்லமை கொண்ட கூட்டம்தான் எனக்குத் தேவை... பெரும் கும்பல் தேவை இல்லை. வசதிகளோடு சொகு சாகிக் கிடக்கும் மேல்தட்டு மனிதர்கள், சமூகத்தின் மீது அக்கறைப்பட வேண்டிய அவசியமற்று உலவுகிறார்கள்; வறுமைக்கு வாக்கப்பட்டுக் கிடக்கும் கீழ்த்தட்டு மக்கள், பசியைத் தீர்க்கவே வழியற்றுத் தவிக்கிறார்கள்.
இரண்டுக்கும் இடைப்பட்டு வாழும் நடுத்தரவர்க்கம் தான் சமூகப் போராட்டங்களில் களமிறங்க வேண்டும். ஆனால், இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினரை டி.வி. பெட்டிகளுக்குள்தான் தேட வேண்டி இருக்கிறது. ஊடக போதையில் மயங்கிக் கிடக்கும் அவர்களின் மதி மழுங்கடிக்கப்பட்டு விட்டது. மானாடுவதும் அசத்தப் போவதும் அவர்களின் அறிவை அட்டையைப் போல் உறிஞ்சி விட்டது. அதனால் நடுத்தர வர்க்கம் செய்ய வேண்டிய கடமை, நிறைவேற்ற ஆள் இல்லாமல் அனா மத்தாகக் கிடக்கிறது. ஆனாலும், சமூகக் கடமைக்கான கூக்குரலை எழுப்பவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காக நான் யாரையும் கையைப் பிடித்து இழுக்கப் போவதில்லை. மாற்றத்துக்காக ஏங்கு பவர்கள் மட்டும் என்கூட வந்தால் போதும். யாரும் வரவில்லை என்றால், நான் மட்டுமே இலக்கு நோக்கி நடப்பேன். சமூக நலன் சார்ந்த நிறைய இளைஞர்கள் சமீபகாலமாக என் கண்ணில் படுகிறார்கள். பெரியாரைப் போல, காந்தியைப் போல அரசியலுக்கு வெளியே நின்று போராட என் இயக்கம் தயாராகி விட்டது. அதனால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தொகுதிக்கு ஆயிரம் பேர் சேர்ந்தாலே போதும்... காந்தியமும் பெரியாரிஸமும் கைகோக்கும் மையப்புள்ளியாக காந்திய அரசியல் இயக்கம் மலரத் தொடங்கி விடும்!''
''அரசியல் மற்றும் அரசியல்வாதிகள் மீது தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட வெறுப்பும் அதிருப்தியும்தான் உங்களை தனி இயக்கம் காண வைத்ததா?''
''வெறுப்பு, அதிருப்தியுடன் நம்பிக்கையின்மையையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நாற்பதாண்டு கால அரசியல் வாழ்வில் எத்தனையோ அரசியல்வாதிகளைப் பார்த்து விட்டேன்; பழகி விட்டேன். அவர்களின் உண்மை முகம் அருவருப் பானதாக இருக்கிறது. ஆட்சி நாற்காலியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதையும் செய்யத் துணிகிற கலைஞர்... ஆட்சிக் கேடுகளைத் தட்டிக் கேட்கிற தகுதியற்ற, தைரியமற்ற எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா... சோனி யாவுக்கு பல்லக்குத் தூக்குவதைத் தவிர, தவறியும் சமூக அக்கறை காட்டி விடாத காங்கிரஸ் தலைவர்கள்... மாறி மாறி கூட்டணி வைத்து, தங்களின் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவே போராடிக் கொண்டிருக்கும் இடதுசாரித் தலைவர்கள்... இவர்களில் யாரை என்னால் நம்ப முடியும்? யாருடைய போக்கை சகித்துக்கொள்ள முடியும்? இவர்களை விட்டு விலகுவதைவிட, இவர்களை விரட்டுவதுதான் இன்றைய கட்டாயம்.''
''அப்ப விஜயகாந்த்...?''
''அவர் மட்டும் தனி அவதாரமா? கன்னத்துச் சதை தொங்குகிற வரை எவ்வித சமூக நினைப்பும் இன்றி, நடிகைகளுடன் டூயட் பாடி கோடிக்கணக்கில் சம்பாதித்த விஜய காந்த், இப்போது சமூகத்தைத் திருத்தப் போவதாக திருவாய் மலர்ந்து கொண்டிருக்கிறார். அவரிடம் ஒரே ஒரு கேள்வியை வைக்க நான் ஆசைப்படுகிறேன்... நீண்ட நெடிய சினிமா வாழ்வில் முறையாக சம்பாதித்து, தூய்மையாக வரி கட்டி வாழ்வதாக மனசாட்சி மீது கைவைத்து அவரால் சொல்ல முடியுமா? அதற்கான அடிப்படைத் தகுதிகூட இல்லாத விஜயகாந்த், ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பதாகச் சொல்வது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. நடந்து முடிந்த எம்.பி. தேர்தலில் தே.மு.தி.க-வால் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை எடுத்துப் பாருங்கள்... ஃபைனான்ஸியர்களும், ரியல் எஸ்டேட்காரர்களும்தான் நிறைந் திருக்கிறார்கள். தென்காசி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெட்டிக்கடை வைத்திருந்த லிங்கம் என்பவர் நிறுத்தப்பட்டாரே... அவரைப் போன்ற எளிய மனிதர்கள் யாரும் விஜயகாந்த்தின் கண்களுக்குத் தெரிய வில்லையா... இப்போதே ஏழைகளுக்குத் தேர்தலில் வாய்ப்பளிக்காத விஜயகாந்த்தா நாளைக்கு ஏழைகளுக்காக எல்லாமும் செய்யப் போகிறார்? விட்டுத் தள்ளுங்கள் அவரை...''
''உங்களுக்கு பாரதியார் விருது கொடுத்து, திட்டக்குழு உறுப்பினராக பதவி கொடுத்து கௌரவித்தவர் முதல்வர் கருணாநிதி. ஆனால், சமீப காலமாக அவரை மூத்த அரசியல் தலைவர் என்றுகூட எண்ணாமல் கடுமையாக விமர்சித்து வருகிறீர்களே...?''
''அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஊழலில் திளைத்தேறிய கட்சிகள். அதேசமயம், அடித்தட்டு மக்களைச் சென்று அடைகிற வகையில் திட்டங்களை நிறை வேற்றுவதிலும், தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், ஓய்வறியா உழைப்பைக் காட்டுவதிலும் வியக்க வைப்பவர்தான் கலைஞர். ஆனால், அவர் மீது எனக்கு இப்போது இருப்பது - தாங்க முடியாத வருத்தமும், நினைத்து நினைத்துக் குமுற வைக்கும் கோபமும்தான். எந்த இனத்தையும் மொழியையும் வைத்து ஐந்து முறை அவர் முதலைமைச்சராக மகுடம் சூட்டிக் கொண்டாரோ... எதை வைத்து பெயர், புகழ், செல்வம், செல் வாக்கு என எல்லாவற்றையும் சேர்த்துக் கொண்டாரோ... அந்த இனத்துக்கு ஒரு துயர் வந்தபோது, அவர் பொங்கி வெடித் திருக்க வேண்டாமா? அவருடைய இதயத் தசைகள் துடித்திருக்க வேண் டாமா... ஆனால், அதிகாரத்தைக் காப் பாற்றிக்கொள்ள வேண்டிய ஒற்றைக் காரணத்துக்காகத் தன் இனத்துக்கு நேர்ந்த அத்தனை கொடூரங்களையும் கை கட்டி வேடிக்கை பார்த்தாரே... அதை எப்படியய்யா மறக்க முடியும்?!
இன்றைய கால ஓட்டம் கலைஞரின் துரோகத்தை மறந்தாலும் மறைத்தாலும், நாளைய வரலாறு கண்டிப்பாக மறக்காது... மன்னிக்காது..! இப்போதும் அடித்துச் சொல் கிறேன்... கலைஞர் நினைத்திருந்தால், ஈழத்தில் இவ்வளவு பெரிய அவலம் கண்டிப்பாக நடந்திருக்காது. நாற்பது எம்.பி-க்களை வைத்திருந்த கலைஞர், சோனியாவின் அரசுக்கு எதிராகக் கொந்தளித்திருந்தால், ஈழம் இழவுக்காடாக மாறி இருக்காது..! ஆனால், நாற்காலியைத் தக்க வைத்துக்கொள்கிற நடுக்கத்தில் கலைஞர், இன அழிவு குறித்து இம்மியளவும் கவலை கொள்ளாதவராக இருந்தாரே... அந்த துரோகத்தை மறந்துவிட்டு, அவருக்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டே இருந்திருந்தால், இன்னும் எனக்கு நிறைய நன்மைகளை அவர் செய்திருப்பார். ஆனால், இந்த சரீரத்துக்குள் ஓடும் ரத்தம் சாக்கடையாக இருந்தால்தான், தமிழருவியால் கலைஞரின் துரோகத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்திருக்க முடியும்!''
''உங்களைப் பற்றி, 'தாவுவதற்கு இனி வேறு கட்சி இல்லாததால்தான் தனி இயக்கத்தில் தமிழருவி இறங்கி விட்டார்' என சிலர் நக்கலடிப்பார்களே...?''
''காமராஜ் என்கிற தன்னலமற்ற தலைவரின் வழியில் காங்கிரஸில் சேர்ந்தவன் நான். காமராஜரின் திருவாயால் 'தமிழருவி' என அழைக் கப்பட்டவன். 1969-ல் காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோதும்... ஸ்தாபன காங்கிரஸில் காமராஜருக்கு பக்கத்தில்தான் இருந்தேன். ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாவானது. பின்னர் ஜனதா, ஜனதா தளமானது. நான் அவற்றில் இருந்தேனே தவிர, எந்தக் கட்சிகளையும் நோக்கி ஓடவில்லை. ஜனதா தளத்தில் இருந்து வடிவேலு என்னை வெளியேற்றியபோது, ராமகிருஷ்ண ஹெக்டேவால் லோக் சக்திக்கு அழைக்கப்பட்டேன். ஆனால் லோக்சக்தி, பி.ஜே.பி-யுடன் கூட்டு வைத்தபோது, காமரா ஜரின் மதசார்பின்மை கருத்தை மனதிலேற்றி வைத்திருந்ததால், நான் அங்கிருந்து வெளியே றினேன். தமிழ் மாநில காங்கிரஸை ஜி.கே.மூப்ப னார் தொடங்கியபோது, என்னை பாசத்தோடு அழைத்ததால் அங்கே போனேன். பின்னர் த.மா.கா-தான் காங்கிரஸில் இணைந்ததே தவிர, நானாக எங்கும் போகவில்லை. மழுங்கிய உளியைத் தூக்கிப் போட்டுவிட்டு, சிலையை வடிப்பதற்காக அடுத்த உளி எடுக்கும் சிற்பியைப் போலத்தான் நான் இயங்கினேன். ஒரே வீட்டில் இறக்கும் வரை இருப்பதனாலேயே ஒரு விலைமகள், கண்ணகி ஆகிவிட மாட்டாள். புகாரில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டதாலேயே கண்ணகி கற்பிழந்தவளாகி விடமாட்டாள். நான் கண்ணகியைப் போல் கம்பீரம் கலையாத கற்புள்ள அரசியல்வாதி!''- ஆவேசம் குறையாமலே விடை கொடுக் கிறார் அருவி!
011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு
10 years ago
2 comments:
//எங்களுக்கு எந்தக் கட்சியும் எதிரியில்லை//
அப்ப, யார் கூட வேணாலும் கூட்டு வச்சுக்கலாம்.. என்ன நுண்ணரசியல்??
//முப்பது கோடி மக்களுக்கான சுதந்திரத்தை ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்களின் போராட்டங்கள்தான் பெற்றுக் கொடுத்திருக்கிறது//
அப்ப 3 லட்சம் நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட் மட்டும்போதும் இந்தியாவை துண்டாடுவதற்கு. சரியா?
நல்ல பதிவு பனிமலர். ஆனால் இடுகையின் நீளம் அதிகமோ என்று அயர்கிறேன்.
தொடர வாழ்த்துக்கள்!!
தமிழருவி மணியன் அவர்களை பற்றி ஆரம்பத்தில் எனக்கும் அப்படிதான் ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அவருடைய அரசியல் நகர்வுகளை ஓர்ந்து பார்க்கை எனது பார்வையில் உள்ள குறை தெரிந்தது. ஐயா அவர்களது அரசியல் நகர்வுகளை பொருத்து இருந்து பாருங்கள்.
உங்களது இரண்டாவது கேள்வி எனக்கு விளங்க இல்லை விளக்கவும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....
Post a Comment