Saturday, November 10, 2007

பகுத்தறிவு தந்தை

அவனுக்கு திருமணம் முடிந்து இப்போது 3 வயதில் ஒரு மகனும் இருக்கிறான். கல்லூரி காலத்தில் தோன்றிய அறிவு அந்த பகுத்தறிவு அவனுக்கு. அன்று முதல் கடவுள் மறுப்பில் இருந்து இன்னமும் என்ன இருக்கிறதோ அவைகள் அனைத்தையும் தெரிந்து பழகவும் தொடங்கியவன் சீர்திருத்த திருமணம் வரை சென்றான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மனைவியும் கணவனை புரிந்தவளாய் அவனது கொள்கைகளோடு ஒத்து போனாள் என்னாளும்.

3 வயது முடியும் தருவாயில் இருந்த அவனது மகனுக்கு தமிழும், தமிழின் இனிமையும் என்று, தமிழ் சம்பந்தபட்ட அனைத்தையும் தேடி பிடித்து கதைகளாக சொல்லுவதை பழக்கத்தில் கொண்டான். அவனது பகுத்தறிவு கதைகளின் கருத்துக்களை அந்த பிஞ்சு மழழையில் சொல்லுவதை பார்த்து பூரிக்காத நாளே இல்லை அந்த குடும்பத்தில். இதை ஒரு சாதனையாகவே பழக்கி வந்தான் மகனுக்கு.

வரும் தீபாவளியை மனதில் வைத்து, தீபாவளி சம்பந்தமாக உள்ள பகுத்தறிவு கருத்துகளை மறுபடியும் மகனின் மனதில் பதியும்படி சொல்லி வந்தான். துவக்கத்தில் அப்பா சொல்லுவதை எல்லாம் அழகாக மனதில் வாங்கிய அந்த பிஞ்சு அருமையாக அவன் கேட்கும் கேள்விகளுக்கு பகுத்தறிவு பதில்களை அள்ளி வீசியது.

தீபாவளி நெருங்க நெருங்க அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகள் அவரவர் வயதுக்கு தகுந்த அளவில்லான வெடிகளை அவ்வப்போது வெடிப்பதும், கூடி விளையாடும் போது யார் வெடித்த வெடிகள் பெரிது என்று வாக்கு வாதம் வருவது வழமையானது. என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கூட விளங்காத அந்த மழழையும் சொன்னது நான் நாளைக்கு இதை விட பெரிய வெடியாக வெடித்து காட்டுவேன் பார் என்று. சொன்னதோடு வீராப்பாக வீட்டிற்கும் வந்தான்.

இரவு வீடிற்கு வந்த தந்தையிடம் வழக்கமான கொஞ்சலுக்கு பிறகு அப்பா மறுபடியும் பகுத்தறிவு கதைகளை சொன்னார். தீபாவளி இன்னமும் அருகாமையில் வந்ததால் இன்றைக்கு நரகாசூரனது கதையை முழுவது சுவையாக சொல்லிமுடித்தார். கதைக்கு பிறகு கேள்விகளை இவரே அவனிடம் கேட்டு பதிகளை சொல்லித்தருவது வழமை. அப்படி அனைத்து பகுத்தறிவு கேள்விகளை கேட்டு முடித்தவர் கடைசியாக அந்த கேள்வியை கேட்டார்.

தான் செய்த தவறுக்கு வருந்திய நரகாசூரன், தனது அழிவை விளக்கொளி வெள்ளத்தில் கொண்டா வேண்டும் என்று கடவுளை பார்த்து வேண்டிக்கொண்டான். அது தான் நாம் தீபாவளியாக கொண்டாகுகிறோம் என்ற அவர், மன்னித்துவிடு என்று மனம் திருந்தி ஒருவர் கேட்க்கும் போது மன்னிப்பது தான் நீதியாகும். அதைவிடுத்து கொண்டாடுவது நீதியாகாது என்று சொல்லி வெடி வெடிப்பது எல்லாம் தவறு என்று முடித்தார்.

அது வரை வெடியை மறந்து இருந்த பிஞ்சு நினைவில் வந்தவனாய், அப்பா எனக்கு நாளைக்கு பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய வெடியை வாங்கி கொடுங்க, நான் அதை கொண்டுப்போய் அவங்க வீட்டுல வெடிக்கனும் என்று சொன்னான் பதிலுக்கு நிற்காமல்.

வெளியே ஓடியவனை பிடித்துக்கொண்டு வந்தவன், மறுபடியும் கேள்வி பதில் ஆரம்பித்தார். அவர் கேட்கும் கேள்விக்கெல்லாம் அழகாக பதில்களை அள்ளி வீசியவன் கேள்விகள் முடியும் வரை காத்திராமல் இடையிடையே வெடியை கேட்கவும் துவங்கினான்......

நேரம் செல்ல செல்ல மகன் நொடிக்கு ஒரு முறை வெடியை சொல்லி சினுங்கலானான். முதலில் பொருமையாக கேட்டுக்கொண்டு இருந்தவர், பிறகு தன்னையும் மறந்தவராய் எல்லையின் விளிம்பில் பேச, மனைவி சொன்னாள் அவனை விட்டுங்க காலம் வரும்போது அவனாக உணர்ந்து கொள்ளுவான். கல்லூரி செல்லுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் பிறகு மாறவில்லை. அது போல அவனும் மாறுவான் என்றாள் உறுதியாக.....

மனைவியின் வார்த்தைகளை நம்பாதவனாக பார்த்துகொண்டு இருக்க, மகனோ அம்மாவின் கால்களை பிடித்துக்கொண்டு அம்மா நாளைக்கு வெடி வேண்டும் என்றான் அழுதுக்கொண்டே

தூக்கம் கலைந்தவனாக படுத்துக்கொண்டு இருந்த அந்த பகுத்தறிவு தந்தை நாளைக்கு எங்கே சென்று நல்ல வெடிகளை அவனுக்கு தகுந்தாற் போல் வாங்குவது என்று மனதில் நோட்டமாக இருந்தவனை பார்த்து சிரித்தாள் மனைவி.

0 comments: