Saturday, September 22, 2007

நிம்மதி

அவர்கள் இருவரும் தம்பதியராய் கோவிலுக்கு வந்து இருந்தார்கள். மூலவர் முதல் சனீசுவரர் வரை எல்லோரையும் பார்த்துவிட்டாகியது, இருந்தாலும் அவர்களுக்கு கோவிலை விட்டு செல்லும் எண்ணம் வரவில்லை. அங்கேயே அமர்ந்தார்கள், பூசைக்கு கொண்டு வந்த படையல்களை உண்டு விட்டு அமைதியாக கோவிலின் பூங்காவிற்குள் சென்றார்கள்.

அங்கேயும் செடி செடிகளாய் பார்த்து பார்த்து சலித்தபின் மறுபடியும் மண்டபத்தில். பிறகு மேலும் ஒரு முறை எல்லோரையும் வலம் வந்தார்கள். இந்த முறை படையல் இல்லை என்றாலும் திருநீரும், குங்குமம், பூக்கள் என்று வந்தது, இவைகளை பகிர்ந்து கொண்ட பிறகும் நேரம் சென்றதாக அவர்களுக்கு தோன்றவில்லை போலும். என்ன செய்யலாம் மனது எங்கும் கேள்வி...

இப்போது வளாகத்தில் உள்ள விலாமரம், செவ்ரலிிமரம், மஞ்சரலி என்று மரங்களை சுற்றி வந்தார்கள். மறுபடியும் மண்டபம், இப்போது அவர் கேட்டார் என்ன போகலாமா. அதற்கு அவள், இன்னும் கொஞ்சம் சென்று போகலாமே பார்வையிலேயே பதில். அதை எதிர்கொள்ள முடியாமல் அமைதியானார்.

நேரே சென்று புளியோதரையும், தியிர் சாதமும் கொண்டுவந்து அருந்த கொடுத்தார். கையோடு தண்ணீர் முகந்து வர சென்றார். அவர் சென்ற திசையையே பார்த்துகொண்டு இருந்தவளுக்கு கண்கள் கலங்கவே செய்ததுதான். இருந்தாலும் எங்கே பார்த்துவிட போகிறார் என்ற எச்சரிக்கை துடைத்துகொண்டு இன்முகத்துடன் இருந்தாள் அவரின் வருகையை நோக்கி.

தண்ணீர் குழாயிலிருந்து கொட்டுவதை பார்த்துகொண்டு இருந்தவருக்கு மனது பிசைந்தது தான். இருந்தாலும் ஒரு ஆண் அழுவதா அதுவும் பொது இடங்களிலே என்ற கர்வம் எல்லாம் அவருக்கு இல்லை எங்கே அவளுக்கு தெரிந்துவிடுமோ பயந்தார். புறப்பட்ட கண்ணீர் அங்கேயே ஆவியானது. புன்னகையுடன் மண்டபத்தை நோக்கி விரைந்தார்.

உணவுக்கு பிறகு மெதுவாக வினவினார் போகலாமா, அப்பவும் இல்லை தான் அவளது கண்களால். இப்போது அவருக்கு சலிப்பு வரவில்லை என்றாலும் மனதில் கவலை தொற்றிகொள்ள தவரவில்லை.

மண்டபத்தில் இருந்தவர்களை கோவில் வேலையாள், ஐயா கொஞ்சம் அப்படி தள்ளி போகிறீர்களா என்றவன் மண்டபத்தை கூட்டி பெருக்க ஆரம்பித்தான். இப்போது அவளின் பிடி கொஞ்சம் தளர்ந்து இருந்தது. மறுபடியும் வினவினார், அவரை பார்த்துக்கொண்டே மண்டபத்தில் இருந்து மூலவரின் இடத்திற்கு நடந்தாள், இவரும் பின் தொடர்ந்தார்.

உள்ளே நின்றவளை ஏற இறங்க பார்த்த பூசாரி, மறுபடியும் இன்முகத்துடன் எல்லா படையல்களையும் கொடுத்து அனுப்பினார். பெற்றுக்கொண்டவள் மறுபடியும் மண்டபத்தை நோக்கி நடந்தாள்.

அங்கே மண்டபத்தில் தரையில் சமக்காளம் விரித்து வில்லுப்பாட்டு கலைஞர்கள் ஒரு கதையை கதைக்க தயாராகிக்கொண்டு இருந்தார்கள். சற்று நின்றவள் பின் மண்டபத்தை நோக்கி சென்றாள்.

அங்கே அதற்குள்ளாகவே சிறியவர்களும் பெரியவர்களுமாக கூட்டம் இருந்தது. இருவரும் சென்று ஒரு நல்ல இடமாக பார்த்து அமர்ந்தார்கள். அருகே இருந்தவர்களுடன் படையல் பொருட்களை பகிர்ந்துகொண்டார்கள். வாங்கிய சிறுவர்கள் அவைகளை இரகசியமாவும் வேகமாகவும் உண்பதை இவள் கண்டும் காணததாக இரசித்துக்கொண்டு இருந்தாள்.

அதற்குள் தயாரான வில்லுப்பாட்டு கலைஞர்கள், கதையை துவக்கினார்கள். வணக்கத்துக்கு பிறகு இராமன் கோசலைக்கு சென்று சீதையை கரம்பிடித்த கதையை ஆரப்பித்தார்கள்.

இராமனின் பெருமைகளையும், வீரமும், வசீகரமும், தெய்வீகமும் என்று பன்முகமாக இருந்தது முதல் இருபது நிமிடங்க்களுக்கு. பிறகு ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் துவங்கினார்கள். சனகனின் அரசவைக்கு இராமன் வருவதும், அதை சீதை நோக்குவதையும் கம்பனும் வால்மிகியும் என்று மாறி மாறி அழகாக வருணித்துகொண்டு இருந்தார் அந்த வில்லுப்பாட்டு கலைஞர்.

இலக்கிய ஆழமும் அவைகளை விளக்க திரையிசையின் பாடல்களுமாக மேன்மேலும் சென்றுகொண்டு இருந்தது. கதையில் இருந்து மீண்டவராய் அவளை கவனித்தார். குழந்தைபோல் கதை கேட்பதையும், நய்யாண்டிகளுக்கு வாய்விட்டு சிரிப்பதை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தார்.

இத்தனை தெய்வீகம் பொருந்திய இராமன் விதியின் வசப்படுவதையும், கடவுளின் மனித பிறப்பாக இருந்தாலும் மனித பிறவிக்கே உண்டான ஊழ் வழி செல்லல் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக இராமகாவியம் அமைந்து இருப்பதை அருமையாக விளக்கிக்கொண்டு இருந்தார்கள்.

இராமன் பட்டம் சூட்டும் நேரத்தில் ஆரம்பிக்கும் சோகம், இலங்கையிலிருந்து நாடு திரும்பி பட்டம் ஏற்கும்வரை இராம தம்பதியர் அடைந்த துன்பங்களுக்கு அளவே இல்லை.

கதைகளின் நடுவே ஆங்காங்கே நடைமுறை வாழ்க்கைக்கும் இராமயணத்திற்கும் உள்ள தொடர்புகளை மிகவும் அழகாகவும், ஆழமாகவும் சொல்லிக்கொண்டே போனார்கள்.

இராமனின் கதை இனிதே முடிந்தவுடன், இவர் அவளை பார்க்க அவள் போகலாம் என்று கண்களாலே சொல்ல. நிம்மதி பெருமூச்சுடன் அழைத்துகொண்டு வாசலுக்கு வந்தார். பூக்கடையில் இருந்த காலணிகளை பெற்றுகொண்டவர், தவறாக நினைக்கப் போகிறார் என்று பணம் கொடுக்க முயல. கடைக்காரரோ பரவாயில்ல போய்வாங்க புன்னகையுடன். இருவரும் தெருவிலே இறங்கி நடந்தார்கள்.

போன மாதம் நடந்த விபத்தில் ஒன்றே ஒன்று கண்னே கண்னு என்று வளர்த்தெடுத்து, பார்த்து பார்த்து திருமணம் முடித்து, கடைசியில் விபத்தில் தம்பதியராக மகனையும் மருமகளையும் ஒருங்கே விதியின் கைகளுக்கு கொடுத்த அவர்களின் சோகம் சொல்லி மாளாதது தான்.

இத்தனை காலமாய், அழுவதை தவிற வேறு எதையும் தெரியாமல், கண்ணீரும் கம்பலையுமாகவே இருந்தவளை தனக்குள் இருக்கும் சோகத்தையும் மறந்து அவளை தேற்றுவதையே மூச்சாக செயல்பட்டவருக்கு இன்று நெஞ்சின் பாரம் இறங்கி இருந்தது.

என்ன என்னவோ செய்து ஆருதல் தேடிபார்த்தும் கிடைக்காத நிம்மதி இப்போது கிடைத்திருந்தது இருவருக்கும். ஆருதலாக இருந்தது. அது நாள் தொட்டு தினமும் அந்த கோவிலுக்கு வருவதையும், தெய்வகாரியங்களில் அதிகமாக தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள் அந்த தம்பதியினர்.

1 comments:

')) said...

கதையென நினைத்துப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கும் போது கதையின் ஓட்டத்தை வைத்து இப்படித்தான் கதை போகுமென தீர்மானித்தேன். ஆனால் விதி வலியது.
சடாரென ஒரு திருப்பம் - எதிர்பாரா முடிவு - நச்சென விதியின் விளயாட்டைச் சொல்லிய விதம். அருமை.அருமை. பாராட்டுகள்.

அன்று தொடங்கி ஆலயம் செல்வது நிம்மதியைத் தருமென முடிவு செய்து சென்றுகொண்டிருப்பதாக முடித்தது போற்றத் தக்க முடிவு