Tuesday, March 10, 2015

JK எனும் நண்பனின் வாழ்க்கை - திரை விமர்சனம்

தமிழில் இப்படி ஒரு படம் வந்து நீண்ட நாட்கள் சென்றுவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இயக்குனர்கள் என்றும் இளமை என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறது இந்த படம். பார்த்திபனை தொடர்ந்து சேரன் இப்போது வந்து இருக்கும் புதிய நுட்பத்தினையும் லகுவாக கையாளுவோம் என்ற ஆளுமை படத்தின் முதல் காட்சிமுதலே தெரிகின்றது.

கதை நமது நண்பனின் கதையை போல் அப்படி ஒரு நெருக்கம். படத்தின் முடிவு அவ்வளவு தெளிவாக நண்பனை நினைவு கூறுதல் என்று பின்னி இருக்கிறார் சேரன்.

அனேகமாக இப்படி ஒரு படமாகத்தான் மாயக்கண்ணாடியை மனதில் நினைத்து எடுத்து இருந்து இருப்பார் என்று இப்போது தோன்றுகிறது.

தோல்விகளை கண்டு துவளாதே என்று சும்மா சொன்னால் போதாது துவளாமல் இருக்க முடியுமா என்று அழகாக காட்டியும் இருக்கிறார்.

நாயகன் மௌனித்து நிற்கும் இடங்கள் எல்லாம் கவிதை, கிராமத்திற்கு சென்று அந்த அம்மாவை பார்த்ததும் ஒரு மௌனம். பிறகு அவரது கணவரை வயல்வெளியில் பார்க்கும் போது அதே மௌனம்.

பின்னர் திரும்பி வரும்போதும் செஞ்சது சரிதானே என்று கேட்கும் போது செஞ்சது சரிதான் அனால் ஏன் என்று கேட்கும் தோழியிடம் ஒரு மௌனம் ஆனால் நமக்கு மட்டும் முடிச்சியை அவிழ்கிறார் அழகு.

நித்தியாவிற்கு வேலை கொடுக்கும் செயல்கள் அழகு, வள்ளுவனின் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலுக்கு காட்சி விளக்கம்.

பொதுவாக வணிகருக்கு பார்ப்பது எல்லாம் வாணிபம் என்று சொல்வாகள் அதை மிகவும் அழகாக காட்டி இருப்பது அழகு.

கதை பறக்கும் வேகமும் அதனுடன் பறக்கும் திரைகதையும் பார்த்து வெகு நாட்கள் கடந்துவிட்டது போலும், படம் அப்படி ஒரு வேகம்.

வசனங்கள் எளிமையாகவும் பொருத்தமாகவும், குறிப்பாக உங்களையே நம்பி இருக்கிற அம்மா அப்பாவை ஏமாத்திடாதிங்க என்ற இடம் மிகவும் அருமை.

ஆங்கிலத்தில் 7 பௌன்டு என்று ஒரு படம் வந்தது, அந்த படத்தை பார்க்கும் போது இதுவே தமிழில் எடுத்து இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்ததுண்டு. இரண்டு படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு படங்கள், இது தான் சேரனின் திறமை.

 நல்ல நாவலை படித்தால் அது நீண்ட நாட்களில் மனதி நிற்கும் என்று சொல்வார்கள் அது போல இந்த படம் நிலைத்து நிற்கும்.

நித்தியாவிடம் உண்மையை சொல்லும் நிமிடத்திற்கு முன்னால் இருவரும் இரண்டு தனித்தனி தளத்தில் சிந்திப்பதை அழகா காட்டியுள்ளார்.

அவன் கண்ணில் வரும் கண்ணீர் பார்ப்பவர்களின் கண்ணில் பனிக்க வைக்கிறது. அதற்கு பிறகு காட்டபடும் அவனது இறுகிய முகம் இன்னமும் காட்சியில் தீவிரம் கூட்டுகிறது.

இவ்வளவு நாள் எங்கேயா ஒளிந்து கொண்டு இருந்தீர் சேரன் என்று சத்தமாக கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது.

விட்டுக்கொடுப்பது தான் வீரம் என்று சொல்வார்கள் ஆனால் விட்டுக்கொடுப்பதிலும் லாபம் வேண்டும் என்று நினைத்து பெறுவது கதையில் அழகு, இங்கு கதைக்குள் என்டமூரே வீரேந்திரனாத்து எட்டிபார்கிறார்.

இருவரும் ஒரே நிறத்தில் உடை என்ற கிண்டலுக்கு பிறகு வரும் காட்சி கவிதை அழகு, அதை தொடர்ந்து வரும் காட்சிகள் எல்லாம் அழகு..........

என்ன செயக்குமாரின் வீட்டிலும் நித்தியாவின் வீட்டிலும் இன்னமும் கொஞ்சம் காட்சிகள் அமைத்து இருந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும், ஒன்றும் மோசம் இல்லை, கடைசியில் வரும் பிரியாவிடை அவைகளை எல்லாம் பூர்த்தி செய்கிறது.

22 பிமேல் கோட்டயத்தில் பார்த்த நித்தியாதான இவர் என்று ஆச்சர்யபடவைக்கும் நடிப்பு. எங்கேயும் எப்போதும் போலவே ஒரு பாத்திரம் தான் இருந்தாலும் அழகாக நடித்து இருக்கிறார் செயக்குமாராக.

வாழ்த்துகள் சேரன், மேலும் பல வெற்றிக்களை குவிக்க இந்த வெற்றி நிச்சயம் ஊக்கமாக இருக்கும்.

5 comments:

')) said...

நல்ல விமர்சனம்...

மனதில் நிற்குமா என்பதை இந்த வாரம் படம் பார்த்தால் தான் தெரியும்....

')) said...

மிக அற்புதமான படைப்பு.... நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மனதை பிசைந்த ஒரு தமிழ்த் திரைப்படம் பார்த்த திருப்தி... சேரனின் திறமை மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது....

')) said...

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மனதை கலங்கடித்த ஒரு திரைப்படம் பார்த்த திருப்தி... தரமான திரைப்படத்தை வழங்கிய சேரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...

')) said...

நன்றி தனபாலன் ஐயா, படத்தை பாருங்கள் கட்டாயம் பிடிக்கும்.

')) said...

சேரனின் திறமை அற்புதமாக படமாகி இருக்கிறது, வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நாகராசன்