Thursday, December 27, 2012

நீ தானே என் பொன்வசந்தம் - 500 Day Of Summerம் - திரைவிமர்சனம்

கௌதம் அடுத்த மணிரத்தனமாக உருவாக நினைக்கிறார் போலும். ஆங்கில படங்களை பார்ப்பது, பிறகு அதையே தமிழில் படமாக எடுப்பது. எங்கே படத்தை கண்டுபிடித்து விடுவார்களோ என்று இராமாயணம், மகாபாரதம் என்று கதைகளை கிளப்புவது மணிரத்தினத்தின் போக்கு.

ஆனால் கௌதமோ அப்படியே ஆங்கில படங்களை தமிழிழே எடுத்தாலும் மணிரத்தினம் செய்வது போல் கதையை எல்லாம் அவ்வளவாக வெட்டவோ அல்லது கூடுதலாக இந்திய படுத்துதலோ இல்லாமல் வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி அப்படியே அப்படமாக எடுப்பார். கௌதமின் கடந்த 3 படங்களும் அந்த வகையை சாரும். என்ன ஆங்கிலத்தில் பேசும் பாத்திரங்கள் தமிழில் பேசும், அமெரிக்க வாழ்வியலில் உள்ள சில செய்கைகளை மட்டும் இந்திய வாழ்வியலுக்கு மாற்றுவது  மட்டுமே அவரது வேலையாக இருந்தது.

இந்த முறை மணியை போல் தானும் இந்திய வாழ்வியலுக்கு மூலப்படத்தின் கதையை மாற்றிக்கொடுப்பது என்று முடிவு செய்துக்கொண்டு இந்த பட தயாரிப்பில் இறங்கி இருக்கிறார் போலும்.500  Day Of Summerபார்த்தபோது முழுமையாக பார்க்கமுடியாமல் அலுப்பு தட்டியது. இந்த படத்தையும் அதே போல் அலுப்பு தட்டும் விதமாகவே கௌதம் எடுத்துள்ளார்.

மணியின் போக்கில் சம்மரின் 500 நாட்கள் கௌதம் மாற்றிய விதம் இப்படி தான். ஆங்கிலத்தில் படம் துவங்கும் முன் காட்டப்படும் கதை தலைவனின், தலைவியின் சிறு வயது விளையாட்டுகளை தமிழில் ஒரு பாட்டுடன் இருவரும் சிறு வயதில் பழகியவராக காட்டியிள்ளார் படத்தின் வேறு ஒரு பகுதியில்.

மொத்த அலுவலகமும் கம்பெனி செலவில் கொடுக்கும் கேளிக்கை விருந்தை கல்லூரிகளின் இடையில் நடக்கும் வாழ்வியல் விழாவாக(cultural function) மாற்றியுள்ளார். அந்த கேளிக்கை விருந்தில் பாடப்படும் பாடல்களை புடிக்கல மாமு என்று படத்தின் துவக்கத்திலும், நித்தியா பேசுவதாகவும், வருண் பாடுவதாகவும் மாற்றி அமைத்துள்ளார். 500ரில் வரும் தலைவனின் நண்பனின் முடியை கூட அப்படியே சந்தானத்திற்கு பொருத்தி எடுத்துள்ளதை கவனிக்க முடியும்.500ரில் தலைவனும் தலைவியும் முதல் முதலில் சந்தித்து கொள்ளும் காட்சியில் பேசிக்கொள்ளும் அந்த பாட்டு என்றால் எனக்கு உயிர் என்று சொல்லும் இடத்தை படம் துவங்கிய காலத்தில் இருந்து நீ தானே என் பொன்வசந்தம் பாட்டை பாடிட்ட இல்ல இனிமேல் நான் அவ்வளவு தான் என்று காட்டியிள்ளார் கௌதம்.

தமிழில் வருண் எம்பிஏ படிக்க கோழிக்கோடு செல்வார், 500ரிலோ தலைவன் கட்டிட வடிவமைபாளருக்கு படித்துவிட்டு வாழ்த்து அட்டைக்கு வசனம் எழுதிக்கொடுக்கும் வேலையில் இருப்பார். தலைவனும் தலைவியும் பிரிந்த வேளையில் தலைவன் கட்டிட வடிவமைப்பாளர் துறைக்கு மீண்டும் தன்னை தயார் படுத்திக்கொள்ளும் செயலை வருண் எம்பிஏ படிக்க செல்லுவதாலும் அங்கே நித்தியாவை வரவேண்டாம் என்று சொல்வதாலும் பிரிந்துவிடுவதாக மாற்றி இருக்கிறார்.

500ரில் ஒரு சிறுமி வந்து தலைவனுக்கு ஆருதல் கூறுவார், தமிழில் அதை ஒரு குண்டு பெண்ணாக மாற்றியுள்ளார். 500ரில் சம்மர் இவனை விட்டு விட்டு சென்றதும், அலுவலகத்தில் பெண்களை பற்றி ஆத்திரத்துடன் பேசும் வசனங்களை பெண்கள் என்றால் எல்லாம் பொய் தானா என்று பாட்டாக மாற்றியுள்ளார்.

500ரில் பிரிந்த இருவரும் ஒரு திருமண வைபவத்திற்கு இரயிலில் செல்வார்கள். அந்த பயணத்தில் ஒருவரும் பேசிக்கொண்டாலும் அவர்களுக்குள் அந்த நெருக்கம் இல்லை என்று தெளிவாக காட்டி இருப்பார்கள். வைபவத்தில் இருவரும் சேர்ந்தும் நடனம் ஆடும் காட்சிகள் தமிழில் எல்லோரும் சேர்ந்து ஆடும் நடனமாக மாற்றி இருப்பார்கள்.500ரில் இறுதிக்கட்ட காட்சியில் சம்மர் தலைவனை அவன் தனியாக அமர்ந்து இருக்கும் இடத்தில் வந்து சந்திப்பார். அந்த இடத்தில் இரண்டு நீள இருக்கைகள் இருக்கும். பட்ட பகலில் சந்தித்துக்கொள்வதை நடு இரவு என்று தமிழில் மாற்றி இருக்கிறார். மேலும் அந்த காட்சியில் தலைவன் தலைவியின் திருமணதிற்கு மகிழ்வதாக தலைவன் சொல்வதை பொய்யாக சொல்லாதே என்று சொல்லும் காட்சியை, தமிழில் நீ என்னை பற்றி தவறாக நினைக்கக்கூடாது என்று மாற்றி இருக்கிறார்.500ரில் சம்மரின் வீட்டில் நடக்கும் விருந்திற்கு செல்லும் தலைவனின் எதிர்பார்ப்பும், உண்மையில் என்ன நடக்கிறது என்றும் திரையை இரண்டாக பிரித்து காட்டுவார்கள். தமிழில் அதை திருமண வரவேற்பு என்று காட்டி அதில் நித்தியா ஒருவரும் இல்லாது வருணை அருகில் சென்று சந்திப்பதாகவும், அந்த இடத்தில் ஒருவரும் இல்லை என்று காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

500ரில் தலைவன் 500 நாட்களுக்கு பிறகு நேர்காணலில் சந்திக்கும் பெண்ணிடம் பழக எண்ணி அவளிடம் நாம் நேர்காணல் முடிந்ததும் வெளியில் போகலாமா என்று கேட்பதை அப்படியே தமிழில் வேறு ஒரு பெண்ணோடு திருமணம் நடப்பதை போல் காட்டியுள்ளார்.

இந்த செயல்களோடு நிறுத்தி இருந்தால் படம் தப்பி இருக்கும், ஆனால் ஆங்கிலத்தில் சம்மர் கூறும் வசனங்களாகிய "உன்னோடு எனக்கு திருமணம் செய்துகொள்ளும் உணர்வு வரவில்லை, ஆனால் அன்றைக்கு அவனை பார்த்த உடன் வந்தது செய்துக்கொண்டேன்" என்று சொல்லும் வசனங்கள், இந்திய வாழ்வியலில் ஏற்றுகொள்ள முடியாத நெருடலாக இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ வருணின் குடும்பம், அதிலே குழப்பம் அதனால் அவன் கோழிக்கோடு போகிறான் என்று எல்லாம் குழப்பி இருக்கிறார் பாவம்.

மூலத்தில் உள்ள நிகழ்வுகளை அப்படியே அதே ஓட்டத்தில் பிடித்த காட்சிகளில் அதிக குழப்பம் இல்லை. படத்தில் கௌதமாக சேர்த்த காட்சிகள் கதையிலும் ஒட்டவில்லை, மனதிலும் ஒட்டவில்லை. இவைகளை சப்பைக்கட்டு கட்டுவதற்கு சின்ன சின்ன செய்களுக்கும் நிகழ்வுகளுக்கும் காதலர்கள் இப்படி தான் சண்டையிட்டு கொள்வார்கள் என்று இலக்கணம் படைக்க முயலுகிறார்.

இந்திய வாழ்வியலில் இல்லாத கண்டதும் காதல் அடுத்த காட்சி படுக்கையறை என்று இருக்கும் 500ரின் காட்சிகளை அப்படியே படமாக்கிவிட்டு, சம்மர் நீ வேண்டாம் என்று தலைவனை விலக்கும் காட்சிகளை மட்டும் மாற்றி இருப்பது நடுநிசி நாய்கள் கற்றுக்கொடுத்த பாடம் போலும்.

500ரில் வரும் 1980களின் பாடல்கள் போல் வேண்டும் என்று நினைத்து இருப்பார் போலும் அதனாலோ என்னவோ இராசாவை நாடி 8 பாடல்களை வாங்கி 500ரில் காட்டும் துண்டு துண்டு பாடல்கள் போல் தமிழிலும் துண்டு துண்டாக காட்டியுள்ளார். 500ரில் வரும் பின்னணி இசையை போல் அந்த அந்த இடத்தில் வரும் ஓசைகளே இசையாக இருக்கட்டும் என்று இராசாவின் கைகளை கட்டிப்போடுவிட்டார் போலும். இராசாவை குறைசொல்லும் மக்களே 500ரை பாருங்கள் பிறகு புரிந்துகொள்வீர்கள் இசை யாருடைய கைவண்ணத்தில் இப்படி ஒடுக்கப்பட்டது என்று.

பின்னணி இசையில் இராசாவின் கைகளை கட்டிப்போடாலும் பாடல்களில் அவரது கைகளை 80களின் போக்கில் பாடல்கள் வேண்டும் என்ற கோரிக்கையை அழகாக பூர்த்தி செய்து இருக்கிறார் இராசா. பொங்கலுக்கு நீ தானே என் பொன்வசந்ததின் பாடல்கள் என்று தனியாக வெளியிட்டாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

விச்சை தொலைக்காட்சியில் கிரித்துமசு விழா நிகழ்ச்சியில் கௌதமிடம் கேட்கப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் scriptல் இருந்தது என்று கேள்விக்கு கேள்வி பதில் சொல்வதை பார்க்கலாம். என்ன 500ரில் உள்ள script என்று சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும், பரவாயில்லை.

அடுத்த படத்திலாவது இந்த குழப்பம் எல்லாம் இல்லாமல் மணியை போல் தெளிவான கதையும் கதையின் நிகழ்வுகளையும் கொண்டு படம் எடுக்க முயற்சி செய்யுங்கள்.

கடைசி செய்தியாக நித்தியாவின் உடைகளும் சிகை அலங்காரமும் வருணின் உடைகளும் கூட 500ரில் இருந்து அப்படி இருப்பதை கவனிக்கவும்.

3 comments:

')) said...

இதெல்லாம் ரூம் போட்டு யோசிச்சு பதிவு போட்டீங்களா

')) said...

Ok ok. Cool, friend.

')) said...

உங்களை ஒரு இஸ்லாமியப்பெண்ணாக பார்க்க நினைக்கிறேன் உங்கள் குடும்ப வாழ்க்கை இஸ்லாத்துடன் இணைந்தால் சுபிட்சமாக இருக்கும் றை பண்ணிப்பாருங்களே!