பழனியம்மாளின் ஒரே இலட்சியம் தனக்கு என இருக்கும் அவளது ஒரே மகனை நன்றாக படிக்கவைத்து, இந்த அன்றாடான் காட்சி பிழைப்பை விடுத்து மாத சம்பளம் நிலைக்கு முன்னேருவதே. அவளது எதிர்ப்பார்ப்புக்கு ஏற்றவாரே அவளது மகன் முருகனும் சிறிய வகுப்பில் இருந்தே மிகவும் அருமையாக படித்தும் வந்தான். இந்த சின்ன வயதிலேயே இத்தனை பொறுப்பா என்று ஆச்சரியப்படாத ஆட்களே இல்லை.
சின்ன வயதில் இருந்து முருகனும் கிருஷ்ணனும் நல்ல நண்பர்கள் இருவரும் அருகே உள்ளே நகராட்சி பள்ளியில் சின்ன வயதில் இருந்து ஒன்றாகவும் நன்றாகவும் படித்தார்கள். தற்பொழுது இருவரும் அண்ணா பல்கலையில் பொறியியல் பயின்று வருகிறார்கள். கிருஷ்ணனுக்கு வீடு மயிலாப்பூரில் இவனுக்கு அங்கு வீடு இல்லை என்றாலும் பழனியம்மாளுக்கு பொழப்பு அங்கே தான். அந்த கபாலீசுவரர் கோவில் வாசலில் பூக்களையும் பூசை பொருட்களையும் விற்றுவருகிறாள்.
இவனும் காலையில் கல்லூரிக்கு கிளம்பும் முன்னும், பின்னும் கடைக்குவந்து பழனியம்மாளுக்கு துணையாக இருந்துவிட்டு இருவரும் இரவில் தான் வீடு திரும்புவார்கள். அன்றைக்கும் அப்படி தான் கடைக்கு சென்றடைந்தான். எப்போதும் தன்னுடன் பேசிக்கொண்டும் கடைப்பக்கம் வந்துவிட்டும் செல்லும் கிருஷ்ணன் அன்று ஏனோ வண்டியை விட்டு இறங்கியதும் விரைவாக சென்று மறைந்தான்.
கபாலீசுவரர் கோவில் குளக்கரையும் ஏதோ ஒரு அசாதாரணமான ஒரு சூழல் நிகழுவதை அவனால் உணர முடிந்தது. என்னவாக இருக்கும் ஒன்றும் தோன்றாதவனாக கடைக்கு சென்றான். பழனியம்மாளோ வியாபாரம் ஏதும் இல்லாமல் வேடிக்கை பார்த்தும், வானொலி இசையிலும் பொழுதைகழித்துக்கொண்டு இருந்தவளுக்கு மகனை பார்த்ததும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
எப்போதும் அதிகம் பேசாதவளாக இருந்த பழனியம்மாள், அன்று முருகனிடம் அவளுக்கு இவ்வளவு சோதனைகளும் வேதனைகளும் அனுபவிக்கவேண்டிய கட்டாயம் ஏன் வந்தது என்று தன்னையும் அறியாமல் சொல்லி தனது மன சுமையை அவனிடன் இறக்கிவைத்தாள் 20 ஆண்டுகள் கழித்து. இந்த உரையாடலில் உரைந்து போனவனுக்கு, பேச்சும் ஓடவில்லை சிந்தனையும் தோன்றவில்லை. சிறிது நேரத்திற்கு அங்கே இருவரும் இருந்தும் இருவருக்கும் பூமியில் அனாதையாக விடப்பட்டதாக ஒரு உணர்வு.
முருகனுக்கோ அம்மா சொன்ன வார்த்தைகளையும் அதனால் அம்மா அனுபவித்த துன்பங்களும் அவனது மனதை அழுத்தமாக அழுத்தியது. வேலைகளை எதுவும் அவனால் மேற்கொள்ள முடியாமல், அம்மாவின் அருகே அமர்ந்தவாரே இருந்தான். இலங்கை வானொலியின் இசைத்தொகுப்பும், பசியும் அவனுக்கு தூக்கத்தை வரவழைத்தது. தன்னையும் அறியாமல் அன்னையின் அருகில் அமர்ந்தவாரே தூங்கிபோனான்.
அந்தி மறைந்து இரவின் தொடக்கத்தை காட்டிக்கொண்டு இருந்தது. யாரோ இரண்டு மூன்று பக்தர்கள் வந்து பூசைக்கான பொருட்க்களை வாங்கி சென்றார்கள். சில்லரைகளை சரி பார்த்துக்கொண்டு இருந்தவள், இன்னமும் அதிகமானோர் கோவில் வளாகத்தை அடைவதை பார்த்தவள். வாடிப்போகும் என்று நிழலுக்கு என்று மறைவாக வைத்து இருந்த பூவை எடுத்து முன்னால் வைப்போம் என்று முனைகையில் முருகனின் தூக்கமும் கலைந்தது. கலைந்தவன் அம்மா நான் எடுக்கிறேன் என்று எடுத்து கொடுத்ததுடன் அங்கே ஏற்கனவே இருந்த பூக்களின் மேல் தண்ணீர் தெளித்துவைத்தான்.
திடீர் என வரத்துவங்கிய பக்தகோடிகள் ஆங்காங்கே அப்படியே கூட்டமாக நின்றுக்கொண்டு யாருக்காகவோ காத்துக்கொண்டு இருந்தது. அதில் இருந்த ஒரு சிலர் மட்டும் கபாலீசுவரரை தரிசித்துவிட வேண்டி கற்பூரமும் கையுமாக கோவிலுக்கு சென்றுக்கொண்டு இருந்தார்கள். நேரம் கூட கூட, இன்னமும் கூட்டம் கோவிலுக்கு. காலையில் இருந்து காற்றாடிக்கொண்டு இருந்த வியாபாரம் மிகவும் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தது. அம்மாவும் பிள்ளையுமாக பம்பரமாக குழன்றுக்கொண்டு இருந்தார்கள்.
எங்கிருந்தோ திடீர் என கிருஷ்ணன் அங்கு கடைக்கு வந்தான். அம்மாவை பார்த்து புனகைத்த அவன் முருகனை தனியே அழைத்து பேசிவிட்டு மீண்டும் மறைந்தான். பேசிவிட்டு வந்தவன், அம்மாவிடம், இன்னைக்கு கடை போதும் வாங்க சீக்கிரம் வீட்டிற்கு போவோம், அம்மாவை அழைத்தான். பதிலுக்காக காத்துக்கொண்டு இல்லாமல். கடையை மூடும் விதமாக அனைத்தையும் கண் இமைக்கும் வேளையில் ஒழித்து ஒருவழியாக கடையை சாத்தி விட்டு வண்டியை பிடிக்க சென்றார்கள்.
கண்ணுக்கு எட்டியவரையில் அங்கும் இங்கும் எங்கும் காவியாகவே தோன்றியது. அம்மா அவனிடன் சொன்னாள், என்னடா இப்படி கடை பரபரப்பாக போகின்ற போது சட்டுன்னு மூடிட்டு வந்தே. 9 மணி வரைக்கு இருந்து இருந்தால் உனக்கு பரீட்சைக்கு பணம் கட்டும் அளவிற்கு விற்று இருக்கும் கெடுத்தியே கோவித்துக்கொண்டாள். இவனுக்கோ, போருந்தும் இல்லை, சீருந்துகளும் இல்லாமல் இருப்பதின் மர்மம் விளங்க தொடங்க்கியது.
அம்மாவின் கைகளை பிடித்துக்கொண்டு சந்து பொந்துகளில் நடந்தான். எவ்வளவு நேரம் தான் நடந்தாலும் மேற்கு சைதாப்பேட்டை சென்று அடைவது இயலாத காரியமே. இருந்தாலும் இந்த இடத்தைவிட்டு போனால் போதும் என்று நடந்தான். நடை ஓட்டமாக ஆனது, பழனியம்மாவாள் நடக்கவே முடியவில்லை இருந்தாலும் ஒன்றும் புரியாதவளாய் அவன் அழைத்து செல்லும் பாதையாக அவனுக்கு இனையாக நடக்க முனைந்துகொண்டு இருந்தாள்.
அங்கே அந்த வழியாக ஓட்டமும் நடையுமாக செல்லும் அவர்களை ஒரு கூட்டம் கவனித்தது. முதலில் கேலியாக பேசியவர்கள், இவர்கள் பயந்து ஓடுவதை பார்த்ததும் வேகம் அவர்களுக்குள் கூடியது. எட்டி இருந்தவர்கள் அவர்களை வளைக்க தொடங்கினார்கள். அப்போது அங்கு இருந்தவனின் கைபேசி ஒன்று அலரியது. சேதியை கேட்டவன், ஐயா ஆரம்பிக்க சொல்லிட்டாரு வேலைய கவனிங்க சொல்லிவிட்டு மற்ற குழுவிற்கு தெரிவிக்க கை பேசியை இயக்கிகொண்டு இருந்தான்.
சுற்றி வளைத்தவர்களில் ஒருவன் முருகனின் தலையில் ஓங்கி ஒரு அடி அடிதான் கட்டையால். மற்றவர்கள் அனைவரும் இராமா, கிருஷ்ணா, உன்னை நிந்தித்தவர்களை இனியும் விட்டு வைத்தோமா பார் என்று அவனை அங்கு அடி அடி என்று பிளந்து எடுத்துக்கொண்டு இருந்தனர். நடப்பதை பார்த பழனியம்மாளுக்கு மயக்கம் வந்தது. மெல்ல நகர்ந்த கூட்டம், முதல்வர் ஒழிக, இராம இராஜியம் வாழ்க வாழ்த்துகள் வின்னை பிளந்துக்கொண்டு இருந்தது.
கண்விழித்து பார்க்கிறாள், அருகாமையில் இரத்த வெள்ளத்தில் முருகன் மீதம் இருக்கும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அம்மாவின் கைகளை விடாதவனாக துடித்துக்கொண்டு இருந்தான்.
20 ஆண்டுகளாக துரத்திய விதி இன்னமும் அவளை நிம்மதியாக விடுவதாக இல்லை போலும். மகனை மடியிகிடத்தி செய்வது அறியாமல் அழத்துவங்கினாள். 20 வருடமாக மகன் முன் அழுவதில்லை என்று இருந்தவள் பொத்துக்கொண்டு அழுதாள்.
20 வருடமாக கபாலீசுவரர் வாசலிலேயே தவமாககிடந்தவள், மகன் ஒருவனே அவளது பிடிப்பி, வாழ்க்கை என்று இருந்தவளுக்கு என்ன சொல்லி அழ, வாயில் வார்த்தைகள் கூட சரியாக வரவில்லை அவளுக்கு. என்ன என்னவோ சொன்னாள் என்வென்று அவளுக்கே புரியவில்லை.
தூரத்தில் சென்ற அந்த காவிபட்டாளம் இவள் விழித்துக்கொண்டு அழுவதை பார்த்ததும், சாட்சிகளை விட்டு வைத்தால் பிறகு பிழையாக போய்விடும். ஒரு 4 பேர் மட்டும் இவளை நோக்கி பாய்ந்தார்கள்.
எங்கோ இருந்து வந்தவனாக பாய்ந்தான் கிருஷ்ணன் குறுக்கே, அவர்களை பார்த்து கைகூப்பி நின்றவன் அவர்களது இசைவுக்காக காத்து இருக்காமல் கைபேசியை இயக்கினான். கிருஷ்ணனை பார்த்த அந்த காவிக்கூட்டம் கலைந்து சென்றது.
மறுநாள் காலையில் ஊடகங்களில் தோன்றிய அந்த தேசிய தலைவர், சாதுக்களின் தலைவர் அவர். அடுத்து எப்போது தேர்தல் வரும் அப்படி வந்தால் மக்கள் யாருக்கு வாக்குகள் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளில் மும்முரமாக இருந்தார். அவரின் செய்தியாளர்கள் கூட்டத்தில் எடுத்ததாக தினமணியில் ஒரு 40 படங்களும், தேசிய பத்திரிக்கைகளில் அவர் ஆளும் கட்சிக்கு எதிராக விடும் சவாலும் படமும்மாக மாறி மாறி காண்பித்த வண்ணம் இருந்தது.
அந்த படங்களும் செய்திகளும் முருகனுடனான அவனது 20 ஆண்டு கால பழக்கத்தையும், சேதி தெரிந்தும் அவனால் அவனது நண்பனை தருணத்தில் காப்பாற்ற முடியாமல் போன கையாலாக தணத்தனை கேலியும் கிண்டலும் செய்துகொண்டு இருந்தது. இரவுகளில் தூக்கத்தை இழந்த கிருஷ்ணனுக்கு, இராமனையோ இராமயணத்தையோ கேட்டாலே அந்த இரத்த வாடையும் வன்முறையுமே மனதில் வந்து நிலைகுலைந்து போவான்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு அங்கே கபாலீசுவரர் வாசலில் அம்மாவும் பிள்ளையும். அதே கடை, அதே வியாபாரம். ஆனால் முருகனால் இனிமேல் கட்டையின் துணையில்லாமல் நடக்க முடியாது. மண்டையில் பலமாக பட்ட அடியினால் அவன் பேசும் திறனையும் பார்வையும் இழந்து இருந்தான். கடையில் அவன் பார்த்துவந்த வேலைகளை இப்போது கிருஷ்ணன் பார்த்துவருகிறான் பழனியம்மாளுக்கு துணையாக. இவள் சுமந்த சுமைகள் போதவில்லை போலும் விதிக்கு. முருகனுக்கு உடலளவிலும், பழனியம்மாளுக்கு மனதளவிலும் ஒரே நிலைமை தான். என்று தனியும் இந்த இரத்த தாகம் மதம் பிடித்த அரசியலுக்கு.