Wednesday, January 27, 2016

இஞ்சி இடுப்பழகி - பாவம் அனுசுக்கா இப்படியா செய்வீங்க - All About Steve

முதல் பார்வையில் இஞ்சி இடுப்பழகியை பார்க்கும் போது அடடே ஒரு வெகுளி பெண்ணின் மெல்லிய உணர்வுகளை எப்படி அருமையாக காட்டி இருக்கிறார்கள் என்று தான் தோன்றும்.

ஆங்கிலத்தில் 2009ல் All About Steveன்னு ஒரு படம் வந்தது. அந்த படமும் இந்த படமும் ஒன்று. அந்த படத்தை இந்திய மொழியில் எடுக்கிறேன் என்று இந்த கோணங்கி தனம் செய்து இருக்கிறார்கள் இஞ்சி இடுப்பழகியாக.

ஒரு பெண் பாத்திரத்தை எப்படி அப்பாவியாகவும் வெகுளியாகவும் காட்டமுடியும், இந்த கதையாசிரியருக்கு தெரிந்த ஒரே வழி குண்டான பெண்ணாக காட்டினால் வஞ்சனையில்லாமல் வளர்ந்து இருக்கிறார் என்று காட்டிவிட்டால் போச்சு என்று நினைத்தார் போலும்.

உடலில் வந்த நோயின் பால் இயல்பான வாழ்க்கையில் இருந்து தனிமைபட்டு வாழும் ஒரு பெண்பாத்திரம் ஆங்கிலத்தில்.

இயல்பான வாழ்க்கையை அந்த பெண் நாடவேண்டும் என்று அவளது பெற்றோர்களே அவளுக்கு ஆண் துணையை பெற்று கொடுக்கும் பொருட்டு ஒரு ஆணை வீட்டிற்கு வரவழைக்கிறார்கள். அவனை பார்க்கும் வரையில் இது வரை வந்து சென்ற நோஞ்சான்களை பார்த்தவள் ஒரு இளம் அழகனை பார்த்ததும் அவன் பால் ஈர்ப்பு கொள்கிறாள். ஆர்யாவை பார்த்ததும் அனுசுக்கா நெளிவதை போல்.

அன்றைய தினத்தில் இருந்து அவனது நினைப்பாகவே இருக்கிறாள் தான் எழுதும் குறுக்கெழுத்து போட்டிகளில் கூட அவனை பற்றியவைகளாகவே எழுதவே ஒப்புக்கு சப்பாக இருந்த வேலையும் போகிறது.

இருப்பினும் தொலைக்காட்சியில் படம்பிடிக்கும் ஆளான நாயகன் அப்போது எங்கே இருக்கிறான் என்று தேடி செல்லும் இடத்தில் ஒரு விபத்தில் மாட்டிக்கொள்கிறாள். பிறகு அந்த இடத்தில் இருந்து அவளை மீட்கும் போராட்டத்தில் அவளுக்கு கிடைக்கும் விளம்பரமும் அவளது பொருப்புணர்களையும் பார்க்கும் மக்கள் நெகிழ்கிறார்கள். நாயகனுக்கு  இவளையா உதாசினப்படுத்தினோம் என்று வருந்தும் அளவிற்கு செல்கிறது. கடைசியில் அவளையே காதலிப்பதாக சொல்வது போல் முடியும் அந்த ஆங்கிலப்படம்.

ஆனால் அவளோ இப்போது செய்தி துறை கொடுத்த விளம்பரத்தின் அடிப்படையில் உன்னிடம் கிடைக்கும் அனுதாபத்தை விட ஒன்றும் இல்லாத போதும் என்னோடு இருந்த அந்த வெகுளிக்கூட்டம் போதும் என்றும் கம்பீரமாக செல்வாள்.

இதை இந்திய மயம் ஆக்குகிறேன் என்று ஒரு வில்லான், பெண் பார்க்கும் படலம் இன்னும் ஒரு பெண், அம்மாவுடன் சண்டை என்று குழப்பு குழப்பு என்று குழப்பி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தில் காட்டியது போல் அந்த குழந்தையை வெளியே கொண்டு வரும் வரை தானும்  வெளியே வரப்போவது இல்லை என்று சொல்லும் அந்த அழுத்தமான சம்பவங்கள் தமிழில் இல்லை. காப்பாற்றுகிறேன் என்று அந்த நிருபரும் உள்ளே விழுந்ததும் அவனுடைய எடை எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டு அவனையும் சேர்த்து மேலே இழுத்து வர போராடும் போராட்டம் தமிழில் இயல்பாக அமையாமல் போனது கற்பனை பஞ்சமே.

அது எல்லாவற்றையும் கூட மன்னித்துவிடலாம், இந்த இலக்கிய படைப்புக்காக உடலை பருக்க சொல்லி அனுசுக்காவை மேலும் எடை கூட்ட சொன்ன செயலை மட்டும் மன்னிக்கவே முடியாது.

ஆங்கில கதையில் வரும் நாயகியின் பாத்திரம் போல் இவரும் வெகுளியாக சொன்னது போல் இந்த எடை கூட்டலுக்கு ஆட்பட்டது கொடுமையே.

பாவம் அப்படி இப்படி என்று கடைசியில் அனுசுக்காவின் இரண்டு காதிலும் காலிப்பூவை சொருகிவிட்டார்கள் நமக்கும் தான்.......

Monday, January 25, 2016

செலீன் டியான் வாழ்கையை விதி இப்படியா புரட்டி போடவேண்டும்

 நல்ல பாடகி அருமையான குடும்பம் என்று வாழ்ந்தவரின் வாழ்வில் வந்து வாட்டியது கணவரின் புற்று நோய் அன்றையில் இருந்து பாடுவதையே நிறுத்தினார், நீண்ட போராட்டத்துடன் கடைசியில் கணவரது உயிரும் பிரிந்தது. அடுத்து சில நாட்களில் அவரின் சகோதரரும் இறந்தது மிகுந்த சோகம். விதி இப்படியா இவர் வாழ்கையில் விளையாடனும்.

இவர் பாடிய பாடலில் That's the way it is எனக்கு மிகவும் பிடித்த பாடல்.


Saturday, January 23, 2016

பாக்கியராசுடன் மெக்லீன் மாகான தமிழ்ச்சங்கம்

சிக்காகோ வரை வந்த பாக்கியராசை மெக்லீன் தமிழ்ச்சங்கத்திற்கு அழைத்து ஒரு கூட்டம் நடத்தினார்கள் அப்துல் கலாம் தமிழ் பள்ளியும், மெக்லீன் தமிழ்ச்சங்கமும் இணைந்து.

வரவேற்பில் ஐ பேடும் (IPAD) கையுமாக வரவேற்றார்கள். இணையத்தில் சீட்டு வாங்கியவர்கள் போக மற்றவர்கள் இங்கே சீட்டுகளை பணம் கொடுத்து வாங்கினார்கள்.

மாலை 5:45க்கு அரவமே இல்லாமல் இருந்த இடம் 6:30க்கு எல்லாம் கலைகட்டியது. புளுமிங்டன் விமான தளத்திற்கு பின்னால் உள்ள அந்த பார்க்கி ரெசிடென்சியில் தான் கூட்டம். ஊரை விட்டு வெளியே என்று இருந்தாலும் கூட்டம் குறையாமல் வந்து இருந்தது.

நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் குழந்தைகளுக்கு பக்கத்து அறைகளில் ஒப்பனைகள் நடந்து கொண்டு இருந்தது.

கூட்டத்திற்கு கொண்டு வரவேண்டிய மலர்கள், செண்டுகள், மற்றும் நிர்வாக பொருட்களை சரி பார்த்து வினியோகம் செய்த்து கொண்டு இருந்தார்கள் ஏற்பாட்டாளர்களும் நிர்வாகிகளும்.

வரும் நபர்களை அன்போடு வாருங்கள் என்று அழைத்து உபசரித்தார்கள் விழா குழுவினர்கள்.

விழா குலுக்கலின் முதல் பரிசான தொகாவை பார்வைக்கு வைத்து இருந்தார்கள், அதனுடன் சென்னை வெள்ள நிவாரன பணிக்கு பணம் சேர்க்கும் விதமாக பனியனை விற்பனையையும் விளம்பரபடுத்தி இருந்தார்கள். மக்கள் ஆர்வமாக வாங்கியதையும் பார்க்க முடிந்தது.

சற்று நேரத்திற்கு எல்லாம் பாக்கியராசு தம்பதியினர் வந்துவிட்டதாக செய்த்தி அறிவிப்போடு விழா துவங்கியது.

அனைவரையும் வரவேற்று பேசிய விழா நாயகன் பேச்சின் நடுவில் அவரது மனைவியை வம்புக்கு இழுத்து பேசினார் (அனேகமாக இன்னேரம் பூசை விழுந்து இருக்கும்).

வரவேற்பை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே துவங்கியது. தமிழ் பள்ளி மாணவ மாணவியர்கள் பாடலை பாடினார்கள்.

அதை தொடர்ந்து தமிழ் பள்ளி மாணவர்களின் மாறுவேட நிகழ்ச்சி நடந்தது, இந்தியாவின் பிரபல மக்களை போல் வேடம் இட்டு அந்த சின்ன நட்ச்சத்திரங்கள் மேடையில் மின்னின.

பின்னர் சௌமியாவும் நந்தினியும் ஆடிய பரதம், இருவரும் சிறுமிகள் தான். ஆனால் என்ன ஒரு முக பாவனையும் நடனமும். இவ்வளவு அருமையாக முக பாவனைகளை பெரியவர்களே புரிந்து செய்யாத இந்த காலத்தில் அழகாகவும் அருமையாகவும் அந்த சின்ன நட்ச்சதிரங்கள் ஆடியது ஆச்சர்யமாக இருந்தது. அருமை வாழ்த்துகள்.

அதை தொடர்ந்து சிறுவர்களின் ஓரங்க நாடகம், தமிழ் மொழியை கற்க வேண்டியதின் அவசியத்தை விளக்கும் படியாக 1983ல் ஆரம்பித்து இராமாயண கலம் வரை சென்று அதற்கும் மேல் என்று சிறுவர்கள் கேட்க, இல்லை தமிழின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி ஆராய்த்துக்கொண்டே போனால் கால மாற்றியே திணரி போகும் என்று கவிதையாய் முடித்தார்கள் நாடகத்தை.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது சென்னை வெள்ள நிவாரண பணியும் அதன் பொருட்டு மெக்லீன் மாகான தமிழ்ச்சங்கத்தின் வசுல் மற்றும் சேவைகளை தொகுத்து ஒரு காணொலியாக வழங்கினார்கள். அதில் தங்களுக்கு ஆதரவு வழங்கிய நபர்களையும் குழுவினர்களையும் கௌரவபடுத்தினார்கள் நிர்வாகிகள்.

பின்னர் மேடைக்கு வந்த பாக்கியராசு குழந்தைகளையும் அவர்களை தயார்படுத்திய பெற்றோர்களையும் புகழ்த்து தள்ளினார். மேலும் தனது திரை அனுபவத்தில் குழந்தைகளுடன் நடந்த நிகழ்வுகளை நகைசுவையாக பகிர்ந்தார்.

சென்னையின் வெள்ள நிகழ்சியையும் அதில் தொண்டாற்றிய தண்ணார்வலர்களையும் அதில் மொலீன் மாகான தமிழ்ச்சங்கத்தின் பங்கையும் வெகுவாவும் பாசத்துடனும் நன்றி தெரிவித்தார்கள் பாக்கியராசு தம்பதியினர்.

அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சி பாக்கியராசுடன், அதில் பெண்களிடம் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்ன என்ற கேள்விக்கு பொருமையிம் தாய்மையும் என்று சொல்லி பெருமை சேர்த்தார். மேலும் கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பொருமையாகவும் வெளிப்படையாகவும் நகச்சுவையுடனும் அழகாக பதில் அளித்தார்.

பின்னர் அதை தொடர்ந்து இரவு விருந்து, உணவுகள் யாவும் இல்லத்தரசிகளின் வீட்டு தயாரிப்புகள் தண்ணீரும் ஊருகாயும் தவிர. மற்றபடி ரொட்டி, மிளகாய் கோழி, பக்கோடா, புலவு, பச்சை காய்கறிகள் சேலட், தயிர் சாதம் மற்றும் இரசமலாய் என்று அசத்தி இருந்தார்கள் மெக்லீன் மாகான தமிழ்ச்சங்க மகளீர்கள், அருமை வாழ்த்துகள்.

நன்றி நவில்தலுடன் விழா இனிதே முடிந்தது.

விழா முடிந்ததும் எப்படா பாக்கியராசு சாப்பிட்டு முடிப்பார் என்று காத்து இருந்த மக்கள் அவருடன் நின்று குடும்பம் குடும்பமாக படம் எடுத்துக்கொண்டார்கள்.

பாக்கியராசு தம்பதியினரோ சலிக்காமல் அனைவருடனும் பொருமையாக நின்று படமெடுக்க செய்தார்கள்.

சுமார் ஒரு வாரகாலத்தில் அரங்கு பிடிப்பது முதல் விழா விளம்பரம் மற்றும் வசூல் என்று அசத்திய மெக்லீன் மாகான தமிழ்ச்சங்கத்திற்கு நமது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் சொல்லிக்கொள்வோம். மென்மேலும் இது போல் ஒற்றுமையாக சிறக்கவும் வாழ்த்துவோம்.

Thursday, January 21, 2016

ஆக குடியரசு தின விழா 2016 ஒரு பதட்டமான நிலையில் தான் கொண்டாடுவோமா...

இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பாக்கிட்தானம் 130 அணு ஆயித ஏவுகணகளை இந்தியாவுக்கு எதிராக நிறுத்தியுள்ளதாக அமெரிக்க எச்சரித்து இருப்பதாக தமிழ் இந்துவும், இராணுவ நடவடிக்கை என்றால் மீளமுடியா நிலைக்கு இந்தியாவை தள்ளும் நிலையில் 130 அணு ஆயுத ஏவுகணைகளை பாக்கிட்தான் நிறுத்தியுள்ளதாக விகடனும் தெரிவிக்கிறது.

இது வரை சப்பான் மேல் விழுந்த ஒரு குண்டே அடுத்த நாட்டின் மீது வீசப்பட்டு இருக்கும் ஒரே அணுகுண்டு. 130 குண்டுகளை இந்தியாவின் வீசினால் என்ன ஆகும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

ஆனால் இது எப்படி இந்தியாவின் சர்ச்சை மட்டும் ஆகும், அருகில் இருக்கும் சீனா, இலங்கை, வங்கம், மற்ற சிறு நாடுகளும் தான் பாதிப்புக்கு உள்ளாகும். ஆகையால் போரை தவிர்ப்பது இந்தியாவிற்கு மட்டும் அல்ல இந்தியாவின் அருகில் இருக்கும் நாடுகளுக்கும் அவசியமான ஒன்று தான். இந்தியாவுடன் சேர்ந்தோ அல்லது தானாகவோ இப்படி இரு போர் மூளாமல் இருக்க என்ன என்ன செய்ய வேண்டுமோ அவைகளை செய்து தான் ஆகவேண்டிய கட்டாயமும் கடமையும் உண்டு.

அது சரி இந்தியாவை பற்றி இவ்வளவு கவலை கொள்ளும் அமெரிக்கா, அந்த ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்கு போகாது என்று எதன் அடிப்படையில் நம்புகிறது. அப்படி கிடைக்கும் கால் அமெரிக்கா வந்து தான் வெடிக்க வேண்டும் என்று இல்லை அமெரிக்காவின் நேச நாடுகளோ அல்லது அமெரிக்க சுற்றுலா மக்கள் அதிகம் இருக்கும் நாட்டில் வீசினால் அமெரிக்கா எப்படி சமாளிக்க போகிறது என்றும் தான் கவலை பட வெண்டும்.

என்னவோ இது இந்தியாவின் கவலை என்று ஒருவரும் இந்தியாவை தனித்து விடுவது ஆகாத காரியம் தான்.

ஆனால் இந்தியா என்ன செய்ய போகிறது, அது தான் மோடி இருக்கிறாரே அவரை மட்டும் அனுப்பினால் போது அவ்வளவு தானே. தான் ஒருவனாக சென்று வெள்ளத்தில் தவித்த 10000 குசராத்திகளை காப்பாற்றியது போல் 130 குண்டுகளையும் கையிலே பிடித்து பாக்கிட்தானத்திலே திருப்பி விட்டெறிவார் என்று நம்புவோமாக..........

இந்தியாவுக்கு எதிராக மட்டும் என்று இல்லாமல் என்ன என்ன போக்கிறி தனத்தை மேற்கொள்கிறது என்று வெளிப்படையாக உலகுக்கு பகிரும் வரையில் சிக்கல் தான். என்ன என்ன போதை பொருட்களில் இருந்து ஆயுதங்கள் வரை உலக கள்ள சந்தையில் பாக்கிட்தானம் உலவ விடுகிறது என்ற தகவல்களே அமெரிக்காவிற்கு போதுமானது தான். அது சரி அமெரிக்காவால் மிகவும் தேடப்பட்ட நபரான ஒசாமா பின்லேடன் புகலிடம் கொடுத்ததற்கு என்ன பாக்கிட்தானத்தின் தலையா போய்விட்டது........ அடப்போங்கப்பா உங்க அணு ஆயுத அறிக்கை போர்கள்........

சல்லிகட்டு அரசியலின் பின்னணி என்ன - விழித்துக்கொள்வார்களா தமிழர்கள்

இதை விளக்கும் முன்பு இந்த சல்லிக்கட்டில் தேசிய கட்சிகள் பாராபட்சம் இல்லாமல் தடைவிதிப்பதின் மர்மத்தின் முன் மாதிரியை பார்த்துவிட்டு வந்தால் தெளிவாக புரியும்.

இந்தியாவை ஒளிர வைக்க உலகமயமாக்கலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்க படித்தவர்கள் மத்தியில் பாடம் எடுத்தார்கள் அரசியல் வாதிகள். பொதுவுடமை கட்சிகள் தவிர மற்றவர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பதாக தங்களையும் மக்களையும் சமாதனப்படுத்தியது.

பொதுவுடமை கட்சியினரோ அமெரிக்கா வரும் என்று தான் எதிர்த்தார்களே அன்றி அதனால் பின்னாளில் பறிபோக போகும் பொதுமக்களின் வாழ்க்கைக்கா அல்ல என்றது சோகமே.

உலகமயமாக்களில் இந்தியா இழந்தவைகளும் இழந்துக்கொண்டு இருப்பவைகளும் எவைகள்.

இது வரையில் இராக்கட் தொழில் நுட்பம், அணு உலை/ஆய்வுகள் நுட்பம் என்று தான் இந்தியா இறக்குமதி செய்து வந்தது. சுருங்க சொன்னால் இந்தியாவில் இல்லாவைகளையும் மற்றும் பாதுக்காப்பு ஆயுதங்களையும் தான் இறக்குமதி செய்து வந்தது.

உலக மயமாக்கலுக்கு பிறகு இந்தியா அதிகமாக இறக்குமதி செய்வதுகளில் கவனிக்க தக்கவைகள் வெங்காயம், துவரை, சர்க்கரை, மற்றும் அமெரிக்க இறக்குமதியான பழ வகைகள். ஒரு காலத்தில் அரிசியை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று துவங்கி இன்று ஒவ்வொரு உணவு பொருட்களாக இறக்குமதி பட்டியலில் இடம் பிடிக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை இந்த 30 ஆண்டுகளில் என்ன 30 மடங்கா உயர்ந்தது என்று பார்த்தால் இல்லை. ஆனால் எப்படி இந்த பற்றகுறை வந்தது.

உலகமயமாக்களின் முக்கிய அம்சமாக இந்தியாவில் தொழில்/அரசு நடத்த உலக வங்கி கொடுக்கும் கடனுக்கு அவர்கள் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே பணம் இல்லை என்றால் இல்லை என்று கைவிரிக்க. நான் நீ என்று கட்சி பாகுபாடு இல்லாமல் தலைமேல் தாங்கி எல்லா கட்டுப்பாடுகளையும் நடைமுறை படுத்தினார்கள்.

இதிலே அவர்கள் கைவைத்தது எல்லாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ உழவை அழிக்கும் செயலாகவே அமைந்தன. வங்கி கடனில் இருந்து, விற்கும் விலை வரையில் இந்த மங்காத்தா தொடர்ந்தது.

பொக்ரான் குண்டு வெடிப்புக்கு பிறகு தாக்கு பிடிக்க முடிந்த இந்தியாவால் அடுத்த 6 ஆண்டுகளில் உணவுக்கு அமெரிக்க டாலரில் அடுத்த நாட்டை நாடி நிற்கின்ற அவலம் இன்று வரை தொடர்கிறது.

உணவு பற்றாகுறையின் பட்டியல் இன்னமும் நீண்டுக்கொண்டே தான் போகும் தடுக்கவிட்டால். பிறகு நாம் அன்றாடம் சாப்பிடும் இட்லியும் தோசையும் ஒரு அமெரிக்க கம்பெனியின் பெயரில் நம் ஊரிலே வைத்து நமக்கு குளிர்பாணம் உருளைகிழங்கு வறுவலுடன் விற்பார்கள். இப்போது 1000 2000 என்று கொடுத்து சாப்பிட்டுவிட்டு அந்த கடையில் அது நன்றாக இருக்கிறது இது நன்றாக இருக்கிறது என்று படத்துடன் எழுதுவது போல் பூரிப்போடு நடுத்தர வர்கமும் செய்தியாளர்களும் எழுதுவார்கள்.

உலகமயமாக்கல் என்ற பெயரி நடக்கும் நவீன சுரண்டல் இல்லை என்று வேறு என்ன சொல்வது இதை, இந்த ஏகாதிபத்தியம் நுழைந்தவிதமும் ஒரு பொது நீதியின் பெயரால் எதிர்ப்புகளை அடக்கியவிதாமும் தேசிய கட்சிகளின் அறிஞர்களை சிந்திக்க வைத்து இருக்கிறது அதன் விளைவே தமிழகத்தை தாக்கும் முடிவுகளை மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகிறார்கள்.

உலகமயமாக்கலில் தேசிய நலம் இங்கே மக்கள் மற்றும் விலங்கின் நலம் என்று சொல்கிறார்கள்.

இந்த தடைகள்/சட்டத்தின் மூலம் தேசிய கட்சிகள் சாதிக்க நினைப்பது என்ன, 60 ஆண்டுகள் ஆகியும் இந்தியையும் தேசிய கட்சிகளையும் தமிழகம் புறக்கணித்தே வந்துள்ளது. இந்த நிலையை உடைக்க வேண்டும் என்றால் தமிழகம் என்ன எல்லாம் தனது அடையாளம் என்று கொண்டு இருக்கிறதோ அவைகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மக்கள் நலம் ஞாயம் தர்மம் என்ற பெயரால் அழிப்பது.

பிறகு வெளி நாடுகளில் உணவுக்கு கையேந்துவதை போல் தமிழகத்தின் அடையாளம் தொலைந்த பிறகு மொழி முதல் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பழக்கவழக்கம் எல்லாம் தேசியத்தில் கரைந்து தமிழன் என்றோ தமிழ் என்றோ இல்லாமல் இந்தியன் என்று போகும்.

தமிழர்களாக இருந்தாலும் நாம் இந்தியர்கள் தானே என்று உங்களுக்கு தோன்றலாம், நாம் எல்லோரும் முதலில் தமிழர்கள் பிறகு தான் இந்தியர்கள், வரப்பு உயர முதளாலி உயர்வது போல்.

மாறுப்பட்ட கூறுகளின் வளர்ச்சி சேர்ந்து தான் உடலின் வளர்ச்சியாகும், வெறும் தலை மட்டும் வளர்ந்து மற்ற பாகங்கள் வளராமல் போனால் அது ஊனமாகும்.

தேசிய கட்சிகள் தமிழகத்தை தேசத்தின் ஊனமாக ஆக்க எண்ணி செய்யும் செயலே அன்றி வேறு ஒன்றும் இல்லை.

இந்த அரசியலில் இந்த கூறுகளை சுப்பிரமணி சாமியும் மற்ற பாசக மக்களும் பூடகமாக எடுத்தற்கு எல்லாம் தேசியம் என்று சொல்வதை நம்மால் இப்போது எல்லாம் பரவலாக பார்க்க முடியும் கவனித்து பாருங்கள்.

இந்த போக்கை மக்கள் கையில் எடுத்து சட்ட பூர்வமாக சந்தித்து உடைக்க வேண்டும், இல்லை என்றால் இன்னும் ஒரு 10 ஆண்டுகளில் தமிழகம் செயற்கை பஞ்சதில் வாடி வெளி மாநில முதளாலிகளுக்கு அடிமை பட்டு கிடக்கவேண்டி வரும்.

வடக்கிலும் உலகெங்கிலும் தமிழர்கள் என்றால் கூலிகள் என்று இருந்த பெயரை மறுபடியும் நிறுவி, நாங்கள் ஆளப்பிறந்தவர்கள் நீங்கள் எல்லாம் அடிமையாக பிறந்தவர்கள் என்று வட அரசியல்வாதிகள் மார்த்தட்டுவார்கள். கவனம், விழித்துக்கொள்வார்களா தமிழர்கள்.

Friday, January 15, 2016

அப்போ தமிழர்கள் இந்துக்களும் இல்லை இந்தியர்களும் இல்லை - இராதா இராசன் சொல்வது போல்

சமீபத்திய சல்லிக்கட்டு தடை கலந்துரையாடலில் பங்கு பெற்ற இராதா இராசன் தடைக்கு கொடுத்த தீர்ப்பு எவ்வளவு அழகானது ஆழமானது அர்த்தமானது என்று சொல்லி சிலாக்கித்தார். அது மட்டும் இல்லாது 22 ஆண்டுகளாக விலங்குகளுக்கா இரவவும் பகலும் பாடுபட்டதாகவும் சொன்னார். அவர் சொன்ன தகவல்களை பார்க்கும் போது. விலங்குகள் மீது இவ்வளவு பாசம் கொண்டு இருக்கிறாரே என்று மதிப்பு வரும் அளவிற்கு இருந்தது அவரது பேச்சு.

விலங்குகளுக்கு அதை வதைப்பதை தடுக்கும் வலிமை கிடையாது. அப்படி பிழைப்புகாக வதைபடுத்த சம்மதம் கொடுக்காத விலங்குகளை எதன் அடிப்படையில் மனிதர்கள் இப்படி விளையாட்டு வீரம் என்று வதைபடுத்துகிறார்கள் என்றும் கேட்டு வியப்பில் ஆழ்தினார்.

அவரின் பேச்சில் ஒரு வழக்கை எப்படி எல்லாம் திரட்டி நீதிமன்றத்தில் கொடுத்தால் நாம் எதிர்ப்பார்க்கும் தீர்ப்பை பெறமுடியும் என்ற அறிவு பெற்று இருக்கிறார் என்று உணர்த்தினார்.

காளைகளை போட்டிக்கு தயார்படுத்தலில் எப்படி எல்லாம் அந்த மாட்டை மிரட்ட காளையின் உடல் உறுப்புகளை காயப்படுத்தலும், ஊக்க மருந்தை உட்கொள்ள கொடுப்பதும் போட்டி பாதையை அடையும் முன் அந்த காளைகள் பெரும் பதற்றதிற்கு உட்படுத்தப்படுகிறது என்று ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் கொடுத்ததின் அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு எழுதப்பட்டு இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு இட்சம் வாங்கும் வழக்கறிஞர்களை கொண்டு வழக்கு நடத்திய பின் நன்கு ஆராய்ந்து நீதியரசர் இந்த காட்டுமிரான்டி தனத்திற்கு தடைவித்தார் என்றும் அழகாக சொன்னார்கள்.

அத்தோடு நிற்காமல் எனக்கு விலங்கு உணர்வுகள் தான் முக்கியம் மற்றவர்களை பற்றி எதுவும் எனக்கு புரியாது எனவும் சொன்னார்கள்.

இப்படி இவர் சொன்ன தகவல்கள் தரவுகளை எல்லாம் பார்க்கும் போது அவர் வாதத்தில் ஞாயம் இருப்பதாகவே படும். இரக்கம் அதும் ஒரு பெண் இப்படி இரக்க சுபாவத்தோடு போசுவதை பார்க்கும் போது சண்டைக்கு நிற்பவர்கள் கூட போகட்டும் விடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு  இருக்கும்.

இப்படி காளைக்கு துடிக்கும் இவரே தான் சொல்கிறார், பிற்போக்கான கருத்துகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய எழுத்தாளர்களை கொன்றது குற்றம் ஆகாது என்று. ஏன் என்றால் இது இந்து பூமியாம் இதிலே இந்துத்துவத்திற்கும் இந்து மத காரியங்களுக்கும் எதிராக நடப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று.

ஓ இராத இராசனுக்குத் தான் மனித உணர்வுகளை பற்றி எல்லாம் தெரியாதே. இவர்கள் கூற்று பிரகாரம் பார்த்தால் தமிழர்கள் இந்து இல்லை, பொங்கள் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை இல்லை. அதன் பொருட்டு வரும் சல்லிக்கட்டு இந்துகளின் கலாச்சாரம் இல்லை.

புரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே நம்மை பற்றி என்ன கண்ணோட்டத்தில் நம்மிடனே இருக்கும் பாசக சார்பு மக்கள் நினைகிறார்கள் என்று.

இதை விளக்கி எழுதிய நந்தினிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

இந்துத்துவா’ என்பதே ராதா ராஜனின் ஜல்லிக்கட்டு தடைகோரும் பின்னணி


Friday, January 8, 2016

மாலை நேரத்து மயக்கம் - forgetting sarah marshall - செல்வராகவனும்

செல்வராகவன் இந்த ஆங்கில படத்தை பார்த்து தமிழில் எடுப்பதை எப்போதான் நிறுத்த போராரோ.

இவரை போல உங்களாலும் முடியும் முயன்று பாருங்களேன்.

ஆங்கில படத்தின் முதலில் வரும் காட்சிகளை இடைவேளைக்கு பிறகு என்று மாற்ற வேண்டும். பிறகு அங்க அங்க மானே தோனே பொன் மானே எல்லாம் போட்டு கொள்ளனும்.

பிறகு முதல் பாதி கதைக்கு செல்வராகவன் மாதிரி உள்ள ஒரு ஆளை பிடித்து 12ஆம் படிக்கும் பதின்ம வயது தயக்கம் கூச்சம் அச்சம் எல்லாம் வரும் படி காட்சிக்கள் கொண்டு ஒரு முன் கதை தயாரித்து, பெண்களை மிகவும் வக்கிரம் மிகுந்தவர்களாக வரும்படி வசனங்களுடன் எழுதினால் இன்னும் ஒரு மாலை நேரத்து மயக்கம், ஆயிரத்தில் ஒருவன், இல்லை இப்படி ஏதாவது ஒரு பெயர் வைக்கனும்.

அவ்வளவு தான் நீங்களும் ஒரு நட்சதிர திரைபட எழுத்தாளர் ஆகிவிட்டீர்கள்.

இன்னும் ஒன்று சொல்ல வேண்டும், ஆண் செய்யும் விரச காட்சிகளை எல்லாம் பெண்கள் செய்வது போல் எழுதிவிட்டால் நீங்கள் ஒரு எதார்த்த எழுத்தாளரும் கூட.

என்ன அருமையாக எடுத்த ஒரு ஆங்கிலப்படம் அதை இப்படியா கொத்துயிரும் கொலையுருமா தமிழ்லில் எடுக்கபடுனும்.......

இதுல ஆபச படம்னு சொல்லிபுட்டாங்கன்னு வருத்தம் வேறு, அட ஆண்டவா இந்த செல்வராகவனிடம் இருந்து இந்த தமிழ் பட உலக காப்பாத்தப்பா.....தாங்க முடியல

சோனியாவுடன் ஏற்பட்ட மண முறிவில் இருந்து செல்வா இன்னவும் மீளவில்லை போலும். போதும் விட்டுட்டு வெளியே வாங்க ...................

இந்த படைப்பை கீதாஞ்சலி பெயரில் வெறு வெளியிட்டு இருக்கிறார் மனிதன்...............

இந்த படத்தை கௌதம் மேனன் இல்ல எடுப்பார் என்று நினைத்தால் செல்வராகவன் முந்திக்கொண்டார்.

Tuesday, January 5, 2016

தழைக்கட்டும் மனித நேயம் - நல்ல மக்கள் என்றும் தொலைந்து போய்விடவில்லை

சமீபகாலமாக வரும் படங்களும், கதைகளும் கட்டுரைகளிலும் சரி காலம் மாறிப்போச்சுங்க, இப்ப எல்லாம் அப்படி இல்லைங்க என்று சொல்வது வழக்கமாக ஆகிக்கொண்டே வருகிறது.

மனிதர்கள் எல்லாம் ஒருவரை ஒருவர் தாக்கித்தான் அவன் வாழமுடியும் என்பது போல் ஒரு தோற்றத்தை அந்த வசனங்கள் அர்த்தப்படுத்திக்கொண்டு வந்தது.

அதாவது பொருட்களின் இருப்பு இவ்வளவு தான் என்பது போலவும் அதை ஒருவனிடம் இருந்து பிடுங்கித்தான் மற்றவன் வாழ்க்கை நடத்தமுடியும் என்றது போல் இருந்தது அந்த தோற்றம்மும் அதன் தேற்றமும்.

ஆனால் உண்மையோ வேறு என்று உலகுக்கு புரிய வைத்தது சென்னை வெள்ளம். எத்தனை காலம் தாண்டினாலும் மனிதன் என்றுமே மனிதனாகத்தான் இருப்பான்.

தனது பக்கத்து வீட்டார் படும் துன்பத்தை பார்த்து கதவை சாத்திக்கொண்டு தொலைகாட்சி தொடர்பார்த்து இரசிப்பவர்கள் இல்லை இவர்கள் என்று நிரூபித்துள்ளார்கள் மீண்டும்.

இந்த மக்களில் ஆண், பெண், சாதி, மதம், ஊர், மாவட்டம், மாநிலம், மொழி எல்லாம் ஒன்றும் இல்லை, வள்ளுவன் சொன்னது போல் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற உண்மையை மறுபடியும் உதாரணத்துடன் நிறுவி காட்டினார்கள் மக்கள்.

பொதுமக்கள் கொட்டிய பொருளுக்கும், உழைப்புக்கும், அன்பிற்கும் அளவே கிடையாது. நேசக்கரம் நீட்டிய அந்த மக்களின் மன நிலைதான் அனேக மக்களின் மன நிலையும்.  இத்தனை நாள் மறைபொருளாக மறைக்கப்பட்ட மாயை விலகி வெளிகொண்டு வந்த இயற்கைக்கு நாம் நன்றி சொல்வோம்.

நாட்டின் எல்லைக்கு ஆபத்து வரும் சமயங்களில் உணர்ச்சி பொங்க எழும் ஒற்றுமை என் சக மனிதனின் வாழ்வை பறிக்கும் சந்தர்ப்பத்திலும் வெளிப்படும் என்றும் உணர்த்தியுள்ள அந்த உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துவோம்.

சின்ன வயதில் ஒரு கரடி கதை சொல்வார்கள், அந்த கரடி உன் காதில் என்ன சொன்னது என்று கேட்டதிற்கு ஆபத்தில் தான் உன் உண்மையான நண்பர்கள் யார் என்று தெரியும் என்று சொன்ன தத்துவத்தை அழகாக மக்களுக்கு இக்கட்டான காலத்தில் உணர்த்தி சென்றது இயற்கை.

தொண்டாற்றிய அந்த உயர்ந்த உள்ளங்களை வாழ்த்தி வணங்கி 2016 துவங்குவோம்.